“ஏக்கிய ராஜ்ஜிய” - தமிழரசி!!

 


ஆர்ப்பாட்ட களத்தில் நிற்கும்

அன்பான உறவுகளே!!

கொதிநிலை அரசியல் நிலையில்

கொந்தளித்து நிற்கிறீர்கள், 

கொட்டும் மழையிலும்....


வடக்கு , கிழக்கின் வேள்வித்தீ - இன்று

தெற்கிலும் மேற்கிலும் பற்றியிருக்கிறது.

எரிவாயு, எரிபொருள் 

மருந்து பால்மாவின் தட்டுப்பாடு

இறக்கியிருக்கிறது வீதிக்கு உங்களை!!


பற்றி எரியட்டும்...

உங்கள் போராட்ட தீ,

வெற்றியைச் சுவைக்காமல்

அடக்கி விடாதீர்கள்

ஆர்ப்பாட்ட அலையை. 


"கோட்டா ஹோம் கோ" என

கோசமிடுகிறீர்கள்...

ஒன்றை நீங்கள் விளங்கவில்லை...

கோட்டா போனால் மட்டும்

நிமிராது இந்த பொருளாதார சரிவு. 


இதன் ஆதிமூலம்  ஆரம்பித்தது,

 இன்று நேற்றல்ல...

இனவாதம் கக்கிய 

அன்றிலிருந்தென்பது 

எங்கள் குழந்தைக்கும் தெரியும். 


உங்கள்  போராட்டத்தால்

கிட்டப்போவதென்னவோ

உடனடித் தீர்வுதான்...

ஆரம்பம் அகலாது

இந்த அக்கினி கொழுத்தலால்...


நிதி அமைச்சர் மாற்றம்,

மத்திய வங்கியின்ஆளுநர் மாற்றம்

இவற்றாலெல்லாம் நாட்டை

நிமிர்த்த நினைப்பது போல

நீங்களும் நினைக்கிறீர்களே....


விவசாய விரிவாக்கத்தில்

சிங்கள குடியேற்றம் என 

தமிழர் பகுதிகளை கூறுபிரித்தபோதே

தொற்றிக்கொண்ட 

அரசியல் சர்வாதிகாரம் இது...


இனவாத அரசியல்,

ஒடுக்கு முறையையும்

ஆக்கிரமிப்பையும்

இனச்சுத்திகரிப்பையும்

ஒன்றாகச் செய்யத் தூண்டியது.


வழிவழியாய் வந்த துவேசம்

ஆட்சியாளர்களிடம் கைமாற

இராணுவ அட்டூழியங்கள் 

வரைமுறையின்றிப் பெருகிட

எங்கள் குருதியில் குதூகலம் கொண்டனர்...


இனவாதப் போக்கை 

சந்ததி சந்ததியாய் கடத்தி

மகாவம்ச மனநிலையை

உரமூட்டி வளர்க்க 

பெரும்பான்மைவாத அரசியலானதே. 


தமிழர்  மீதான இனவாதம் 

பேரினவாதத்திற்கு மகாபலமாக

அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு

வாக்களிக்கும் மனநிலையில் 

சிங்கள மக்கள்...


தமிழ் மக்கள் மீது 

இனவாதத்தை கொப்பளிக்கும்

அரசியல் தலைவர்களை

தமது நிதர்சன தலைவர்கள் என

எண்ணத்தலைப்பட்டனர். 


மனிதாபிமானமின்றி  அழித்தொழிக்கும் 

ஆயுதப்படைகளாக மாறிய

பெருஞ்சேனையிடமிருந்து 

பாதுகாப்பு பெற எங்களுக்கு

ஆயுதம் கையிலேறியது. 


பெரும்பான்மையாக 

வறுமை மக்களை கொண்டிருக்கும் 

இலங்கை போன்ற நாட்டிற்கு 

அது பெரும் அபாயம்..

பாதிப்படைவது அதன் பொருளாதாரமே. 


போரை நடத்த, அரசு கடன்  வாங்க

தலைவர்களின் வாக்கிற்கு

சிங்கள் மக்கள் ஆதரவாக

கடன்கட்ட கடன், 

வட்டி கட்ட கடன்....


நீங்கள் தட்டிக் கொடுத்தது

எங்கள் தலை மீது விழுந்தது.

பாடசாலைகள், தேவாலயங்கள், 

குழந்தைகள், முதியோர் என

மிலேச்சத்தனமான தாக்குதல்...


உங்கள் கரவொலிகள்  

எங்கள் உயிர் குடித்தது. 

கடல் நிறைத்த தீவை 

கடன் காவுகொண்டது. 

இறுகிக் கொண்டது தமிழ் மனங்கள்...


குற்றுயிராய் வந்தவர்களை 

கொன்று குவித்தனர், 

வெள்ளைக் கொடிகளை 

வேரறுத்தனர்...

சமாதானப்புறா செத்துப்போனது. 


பெண்ணின் நிர்வாணத்தில் 

பெரு மகிழ்வு கண்டனர். 

பெண்களை கிழித்தெறியுங்கள் 

என்ற கட்டளையை 

சிரம் மேற்கொண்டனர். 


நாங்கள் குருதி கசிந்தோம், 

உருக்குலைந்தோம்

உயிர் துடித்தோம்,

நீங்கள் ஆர்ப்பரித்தீர்கள்,

“ஏக்கிய ராஜ்ஜிய”   என்று மகிழ்ந்தீர்கள். 


நிபுணர்களும் வல்லுனர்களும்

கடன்சுமை அழுத்தும் 

என்றுணர்ந்தாலும்

மூச்சே விடவில்லை

வெற்றிக் களிப்பில்....


அந்த வெற்றியின் விளைவுதான்

மீண்டும் அரச கதிரை...

தனிச்சிங்கள மக்களின் 

ஏகோபித்த வாக்குகள்...

தானைத் தலைவரானார் கோட்டா.....


காலம் கண்மூடிக் கொள்வதில்லை,

கடமைக்காக காத்திருக்கும்..

விழுந்த இடத்தில் தானே

எழும்பவும் வேண்டும்....

இயற்கை சீறினால்  இயலாது வென்றிட..


எழுதத்தடை, விமர்சனம் தடை,

நீதியாய் பேசினால்

நிர்க்கதி என்றனர்.

மனம் கனக்க நாங்கள் 

மௌனம் காத்தோமே...


புலம்பெயர்ந்தவர் வந்தால்

விசாரணை,..

புலிகளுக்கு ஆதரவானவரென்ற கைது

இன்னல்கள் இடர்கள்

எத்தனை....எத்தனை....


சொந்த மண்ணை 

தூக்கி நிறுத்த முடிந்தவர் கூட

இந்த கெடுபிடி கண்டு

மனதை கல்லாக்கி

மறந்தனர் பிறந்த மண்ணை...


வாழ்க்கை வட்டமாச்சு,

விழுந்தது பொருளாதாரம்,

வாய்விட்டு இன்று 

வாருங்கள் என்றழைத்தால் 

வருவது  எந்த நம்பிக்கையில்?


நிர்வாகம் நிலைமாறி 

இராணுவ மயமாச்சு....

புத்தி ஜீவிகள் பேசாதிருக்க

புயல் போல வந்து

சுருட்டிக் கொண்டது 

கடன் சுமை. 


எகோபித்த தலைவனாய்

இரண்டு வருடங்கள் 

கொண்டாடிய நீங்களே - இன்று

"கோ கோம் கோட்டா" என்கிறீர்கள்.

நாங்கள் என்ன சொல்ல? 


அன்றும் இன்றும்

உங்கள் மனநிலைகள் மாறவில்லை

அடிவேர் எதுவென நீங்கள்

உணரவில்லை, 

எங்கள் உயிர்த்துடிப்பு புரியவுமில்லை....


எய்தவர் கோட்டா என்றால்

அம்புகள் நீங்களும்தானே, 

'தமிழர்களை அழிப்பதென்றால் 

தனித்தலைகள் கடன் தாங்கும்'

என்ற பலம் உங்களுடையதுதானே, 


குத்திக்காட்ட 

இதைச் சொல்லவில்லை - நீங்கள்

குருதி சிந்தவும் இல்லை. 

போராடுங்கள்.....

நாங்கள் மௌனமாக இருக்கிறோம்

நீங்கள் போராடுங்கள்....


கோட்டா போனால் மட்டும்

கடன் தொலையாது....

சிந்தியுங்கள்.....

எங்கே தொலைந்ததோ 

அங்கே தேடுங்கள்...


இருட்டு உலகில் 

குருட்டு வாழ்க்கை வாழ்ந்தபடி

வெளி உலகம் காணாமல்

இன்னும் இருக்கிறார்கள் 

எங்கள் சோதரர்கள்....


நீங்கள் இளையோர்,

விரிந்த சிந்தனை கொண்டவர்கள்...

சிந்தியுங்கள்...

உங்களோடு சேர்த்து 

எங்களுக்காகவும்....


உறுதி தளராத 

உங்கள் போராட்டம் 

வெற்றிகொள்ளட்டும்..

இனவாதம் இனியேனும்

எரிந்து போகட்டும்....


---தமிழரசி....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.