வவுனியாவில் இளைஞர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றதுடன், போராட்டக்காரர் ஏ9 வீதியை மறித்தும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் ஏ9 வீதியை மறித்துப் போராடிய அவர்கள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூற்றை ஏற்படுத்தாது பின்னர் பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று ‘கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்’ எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அப்பகுதியில் நின்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் மது போதையில் போராட்டக்காரர் மீது அருகிலிருந்த வெற்றிலைக் கடையிலிருந்து பெட்டி ஒன்றைத் தூக்கி வீசியிருந்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அவருடன் முரண்பட்ட போது குறித்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஒடியிருந்தார். பின்னர் குறித்த நபர் மீள அங்கு வந்த போது அவரை முற்றுகையிட்ட போராட்டக்காரர் அவரை கடுமையாக எச்சரித்தும் இருந்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. இவ் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களும், சிங்கள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை