தமிழினப் படுகொலையின் ஆயுதமாக - ”உணவு”


2006இல் வன்னி பெருநிலப்பரப்பின் மீதான தமிழினப் படுகொலையைத் தொடங்கிய சிறிலங்கா அரசபயங்கரவாதம், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களுக்குமே தடைகளை விதித்திருந்தது. 


அதனால் அங்கிருந்த பல லட்சக்கணக்கான மக்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள் கிடைத்திருக்கவில்லை. அதனால் அரசி ஆலையில் இருந்து வெளியேறும் உமியைத் தூற்றி அதிலிருந்து கிடைக்கும் நெல்லைக் குற்றி பசியினைப் போக்கிக் கொண்டார்கள்.


மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து பொக்கணையில் வசிக்கும் இப்புகைப்படத்தில் உள்ள ஒருவரான கார்த்திகேசு சிவலிங்கம் என்பவர் தெரிவிக்கையில் ”நாம் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து பல இடங்களில் வசித்துவிட்டோம். ஒவ்வொரு இடங்களிலும் தங்குவதற்காக கொட்டில்களை அமைத்து உழைத்த பணமெல்லாம் முடிந்துவிட்டது. தற்போது இந்த அரிசி ஆலையின் உமிக்கும்பியடியில் உள்ள உமியினைத் தூற்றிக் கிடைக்கும் சொற்ப நெல்லினை வீட்டிற்கு எடுத்துச் சென்றே கஞ்சி காய்ச்சி குடிக்கிறோம்.


நான் நேற்றுக்காலை உமிக்கும்பியடிக்கு வந்துவிட்டேன். ஆனால் மாலை 3.30 ஆகியும் அரைக்கிலோ நெல்லுக்கூட சேரவில்லை. இப்படியே பட்டினி கிடந்து சாகவேண்டியது தான்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.


சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடைகளால் போதிய உணவுகள் கிடைக்காமல் பல நூற்றுக்கணக்கானோர் பட்டினிச் சாவடைந்திருந்தனர். ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையால் அவற்றைக் கணக்கெடுக்க முடியவில்லை எனவும், வைத்தியசாலையில் நடந்த ஒரு சில இறப்புச் சம்பவங்களை மாத்திரமே கணக்கிட முடிந்ததாகவும் அப்போது அங்கு ஊடகவியலாளராக பணியாற்றிய ஒருவர் தெரிவித்திருந்தார்.


மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் தமிழ் இனஅழிப்புக்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த சிறிலங்கா அரசுகள் தமிழர்களுக்குச் செய்தது இவைகளை மட்டும் தான்! 


படம் எடுக்கப்பட்ட இடம் - பொக்கணைக்கும் வலைஞர்மடத்திற்குமிடையில் 

திகதி - 01.03.2009

புகைப்படம் - Suren Karththikesu


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.