இந்தியா - இலங்கை இடையே மின்பாதை அமைக்கக் கூடாது!

 


இந்தியா - இலங்கைக்கு இடையே கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக இந்தியா, இலங்கை இடையே பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும், அவை தொடக்க நிலையில் இருப்பதாகவும் இலங்கை அரசின் மின்துறைச் செயலாளா் வசந்த பெரேரா தெரிவித்துள்ளாா். இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.

தென் தமிழகத்தின் வளா்ச்சிக்கான கனவுத் திட்டமான சேது சமுத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக அப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சேதுக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்துக்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

எனவே, இலங்கை இந்தியாவுக்கு இடையே மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.