போக்குவரத்து சபை தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்கும்!
நாட்டில் டீசலுக்கான தட்டுப்பாடு இருந்த போதிலும், இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் தடைகள் இல்லை எனவும் மேலதிகமாக பஸ்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
நாளாந்தம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் 5 ஆயிரம் போக்குவரத்து சபை பஸ்கள் ,தற்போது வழமை போன்று நாடளாவிய ரீதியில் தமது தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதாகவும், கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பந்துக ஸ்வர்ண ஹன்ச தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதிய அளவு எரிபொருள் விநியோகம் இல்லாத பொழுதிலும் இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலையில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாகவும் ஸ்வர்ண ஹன்ச குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தேவை குறைவாக உள்ள சில பகுதிகளில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட தாகவும் அவர் கூறினார்.
எரிபொருள் இருப்பு உரிய நேரத்தில் கிடைக்காதபட்சத்தில் சேவையில் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாடசாலை, அலுவலக நேரங்களில் உரிய முறையில் தமது சேவைகளை வழங்க முடிந்தளவு முயற்சி செய்து வருவதாகவும் ஸ்வர்ண ஹன்ச மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை