தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை மெல்பேர்னில் கிழித்தெறிந்த சம்பவம்! 📸

 


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் புலம்பெயர் சிங்களமக்கள் ஒன்றிணைந்து நடத்திய ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களால் விநியோகிக்கப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பான துண்டுப்பிரசுரங்களை அங்கிருந்த சில சிங்களவர்கள் கிழித்து வீசிய சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலரும் கரிசனையை வெளிப்படுத்திவரும் அதேவேளை, அங்கிருந்த சிங்களவரொருவர் தமிழ்மக்களுக்கு ஆதரவாகப்பேசிய காணொளி பலராலும் பகிரப்பட்டுவருகின்றது.


புலம்பெயர் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ‘கோட்டா கோ ஹோம்’ ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் போராட்டத்தில் உரையாற்றுவதற்கு அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் பேரவையைச் சேர்ந்த அரன் மயில்வாகனம் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிறுத்தி, இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்ட அரன் மயில்வாகத்திற்கு எதிராக அங்கிருந்த சிங்களவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் தமிழ் இளைஞர், யுவதிகளால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களையும் கிழித்தெறிந்தனர்


அதுமாத்திரமன்றி விசேட அதிரடிப்படையின் முன்னாள் உறுப்பினர் என்று நம்பப்படும் ஒருவர், இலங்கையில் தமிழினப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை என்றும், இங்கு இத்தகைய துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவேண்டாம் என்றும் கடுந்தொனியில் கருத்துவெளியிட்டார்.அதேவேளை அங்கிருந்த புலம்பெயர் சிங்களவரான விராஜ் திஸாநாயக்க, தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதுடன் இது தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்க்கவேண்டிய நேரம் என்றும் வலியுறுத்தினார்.


இந்தச் சம்பவங்கள் அடங்கிய காணொளிகள் நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டதுடன், அரசாங்கத்தைத் துரத்தியடிப்பதற்கு அனைத்து இனமக்களும் ஒன்றுபடவேண்டும் என்று கூறுகின்ற சிங்களவர்கள், தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைச் செவிமடுப்பதற்குத் தயாரில்லை என்று விசனத்தை வெளிக்காட்டும் வகையிலான கருத்துக்களும் வெளியிடப்பட்டன.


இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி சம்பவத்தின் பின்னணி என்னவென்று கேட்பதற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கின்ற அரன் மயில்வாகனத்தைத் தொடர்புகொண்டோம். இச்சம்பவம் பற்றிய தனது நிலைப்பாடு தொடர்பில் அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்:


மெல்பேர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் விநியோகிக்கப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் கிழித்து வீசப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.


தமிழ்மக்களின் பிரச்சினைகளை சிங்களமக்கள் புரிந்துகொள்ளும் சூழ்நிலையொன்று உருவாகிவருகின்றது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.


தற்போது நடைபெறும் போராட்டங்களில் தமிழ்மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.


தமிழ்மக்களின் வலியைப் புரிந்துகொள்ளாமல், அவர்கள் போராட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித நியாயமும் இல்லை.


அதேவேளை தமிழ்மக்கள் சிங்களமக்களை விரோதிகளாகப் பார்ப்பதைவிடுத்து, அவர்கள் மத்தியில் புரிதலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய தேவையும் காணப்படுகின்றது.


போரின்போது எனது சகோதரன் உள்ளிட்ட நெருங்கிய உறவுகள் மிகமோசமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், எனது 13 வயதில் நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்தேன்.


எனவே தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மாற்றத்திற்கான போராட்டங்களாக இருக்கவேண்டும் என்றும், அதன்மூலம் மீண்டும் தாயகம் திரும்பக்கூடிய வாய்ப்பு எமக்கு கிட்டவேண்டும் என்றுமே நாங்கள் விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.


அதேவேளை அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த புலம்பெயர் சிங்களவரும் சோசலிஸவாதியும் தொழில்சங்கவாதியுமான விராஜ் திஸாநாயக்கவைத் தொடர்புகொண்டு, தமிழ்மக்களுக்கு சார்பாகக் குரலெழுப்பியதற்கான காரணம் என்னவென்று வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்</p>

<p>நான் இலங்கையிலிருந்தபோதும், இங்கு வந்ததன் பின்னரும் சிறுபான்மையினமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றேன்.


கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில் சிங்களவர்கள் எந்தவொரு அரசாங்கத்திற்கும் எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டதில்லை. மாறாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துவந்திருக்கிறார்கள்.


ஆனால் இப்போது முதற்தடவையாக சிங்களமக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுகின்றார்கள். இவ்வாறானதொரு தருணத்தில் அரச பயங்கரவாதத்தினால் தமிழ்மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதனை சிங்களமக்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். அதன் காரணமாகவே நான் தமிழ்மக்களுக்குச் சார்பாகப் பேசினேன் என்று கூறினார்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.