நரபலி நாயகி சந்திரிகாவின் "செம்மணிப் படுகொலைகள்" - 1996
“செம்மணியில் கடமையில் இருந்தபொழுது, சில நாள்களில் உழவியந்திரங்களின் பெட்டிகளில் உடல்களைக் கொண்டுவந்து தேங்காய் பறிப்பதைப்போன்று கொட்டுவார்கள். அவற்றைக் கொண்டுவரும் உயரதிகாரி இவற்றை விடிவதற்கு முன் புதைக்க வேண்டும் என்று எமக்குக் கட்டளை இடுவார். நானும் ஏனையவர்களும் இணைந்து அவற்றைப் புதைப்போம். அவர்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் எனக்கு மாத்திரம் தண்டனை வழங்கி விட்டார்கள்”
- செம்மணிப் புதைகுழி வழக்கில் கைதாகி தற்போது சிறையிலிருக்கும் சோமரட்ன ராஜபக்ச, மனித உரிமைச் செயற்பாட்டாளரான இக்பால் அவர்களிடம் அண்மையில் தெரிவித்தார் என 23.05.2022ம் திகதி உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.-
1995இன் பிற்பகுதியில் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் ”றிவிரெச” என்ற நடவடிக்கையைத் ஆரம்பித்தனர். இவ் இராணுவ நடவடிக்கையினால் யாழ் வலிகாமப் பகுதி மக்கள் உட்பட அண்ணளவாக 5 லட்சம் தமிழ் மக்கள் செம்மணி வீதி, கோப்பாய் வெளி ஊடாக தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் 1996இன் நடுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றினர்.
இடம்பெயர்ந்த மக்களில் 50வீத மக்கள் வெளிமாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட மிகுதி மக்கள் தங்கள் சொந்த இடங்களிற்குத் திரும்பினர்.
அப்போது யாழ்ப்பாண இராணுவத்திற்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா இருந்தார். அவரின் காலத்தில் யாழ் குடாநாட்டில் கைதாவோர், காணாமலாக்கப்பட்டோர், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொலைப்பட்டியல்கள் அதிகரித்துச் சென்றது. 1996இன் நடுப்பகுதிக்குப் பின்னரான 6 மாத காலத்தில் மட்டும் 700க்கும் அதிகமான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டனர்.
1996 செப்ரெம்பர் மாதம் பாடசாலை மாணவியான கிருசாந்தி மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் 5 இராணுவத்தினர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அந்த 05 இராணுவத்தில் ஒருவர் தான் இந்த ”சோமரட்ண ராஜபக்ச” விசாரணையின் போது ”யாழ் குடாநாட்டில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் சித்திரவதையின் பின்னர் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சடலங்கள் இரவில் செம்மணியில் மேலதிகாரிகளின் உத்தரவின் படி புதைக்கப்படுவதுண்டு. 300 - 400 பேர் புதைக்கப்பட்ட புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்டமுடியும்” என வாக்குமூலம் வழங்கியிருந்தார். செம்மணி, அரியாலை மற்றும் கொழும்புத்துறை முகாம்களில் கொலை செய்யப்பட்ட தமிழர்களே செம்மணியில் அதிகம் புதைக்கப்பட்டதாகவும் சந்தேக நபர்களான இராணுவதத்தினர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
1999ம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தேக நபர்களான இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்ட புதைகுழிகளில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. செம்மணிப்பகுதியில் அரியாலைக் கொட்டுக் கிணற்றடி, தயா கட்டடம் அமைந்துள்ள பகுதி மற்றும் செம்மணி வளைவுப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டது.
முதலாம் கட்ட அகழ்வுப்பணிகளின் போது 10 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் 16 - 35 வயதுடையவர்கள் என பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதன் போது சைவ அந்தணர் ஒருவரும் அவருடைய ”சாளி” ரக மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அத்துடன் முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் நடைபெறுவதற்கு முன்னதாக செம்மணிப் பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்குத் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் இராணுவ வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளின் போது 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது. அவற்றில் ஒன்று பெண்ணினுடையதாகும். அத்துடன் அகழ்வுப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களென 05 இராணுவத்தினர் மற்றும் 01 பொலிஸ் அதிகாரி என அறுவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் இவ் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டு சந்தேகநபர்கள் அறுவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டது.
சந்தேக நபர்களான இராணுவத்தினர் அடையாளம் காட்டிய புதைகுழிகளில் 25 புதைகுழிகள் மட்டுமே அகழப்பட்டது. அதில் மொத்தமாக 16 சடலங்கள் மீட்கப்பட்டது. அவர்கள் அடையாளம் காட்டிய 10 புதைகுழிகளில் சடலங்கள் எவையும் மீட்கப்படவில்லை. அவற்றை இராணுவத்தினர் முன்னெச்சரிக்கையாக முன்னரே தோண்டி எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
செம்மணி புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டு 22 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
இச்சம்பவம் சிறிலங்காவின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்த காலத்தில் நடைபெற்றது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்
ஆவண வெளியீட்டுப்பிரிவு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
#தமிழினப்படுகொலை
#TamilGenocide

.jpeg
)





கருத்துகள் இல்லை