திருமுறிகண்டி வீதி படுகொலை - 23.05.2008


கிளிநொச்சி இரணைமடு பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளைச் சேர்ந்த சிலர் 23.05.2008 அன்று ஹயஸ் வாகனமொன்றில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கள் உறவினர் ஒருவரைப் பார்வையிட்டுவிட்டு, தமது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளை திருமுறுகண்டி - அக்கராயன் வீதியில் பிற்பகல் 02.15 மணியளவில் அவர்கள் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து சிறிலங்கா ஆழஊடுருவும் படையணி கிளைமோர்த் தாக்குதலை நடாத்தியிருந்தது. இத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த நிலையில் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவன் பின்னர் உயிரிழந்தார்.


கொல்லப்பட்டவர்களில் 05 பேர் சிறுவர்கள் ஆவார்கள், 07 பேர் பெண்களாவார்கள்.


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையைப் பார்த்தால் மிகப் பரிதாபமானதாகும்


01. பெரியசாமி விஜயரட்ணம் என்பவரது குடும்பத்தில் விஜயரட்ணமும், அவரது மனைவி மற்றும் 03 பிள்ளைகளும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். இவரது 14,13 வயதான இரு பிள்ளைகள் மாத்திரமே காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். 


02. அழகன் சுப்பிரமணியமும், அவரது மனைவியும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களுக்கு 06 பிள்ளைகளாகும். மூத்தமகளிற்கு 14 வயது, கடைசி மகனிற்கு ஒன்றரை வயதுமாகும்


03. சாமிக்கண்ணு கறுப்பையா என்பவரும், அவரது மனைவியும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தபிள்ளைக்கு வயது 12.


04. கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்த செல்வராசா கலாதேவி என்பவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டார். இவருக்கு 05 பிள்ளைகள். ஐந்து பேரும் சிறுவர்கள்.


05. பன்னீர்ச்செல்வம் அழகுராணி என்பவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டார். அவருக்கு 04 பிள்ளைகள். நால்வரும் சிறுவர்கள்.


இவ்வாறான நிலையில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இத்தாக்குதலானது இச்சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருந்தது.


இத்தாக்குதலில் கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 12 தமிழர்களும், பாரதிபுரத்தைச் சேர்ந்த 04 தமிழர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.  கொல்லப்பட்ட 05 சிறுவர்களும் கிளிநொச்சி பாரதி வித்தியாலத்தின் மாணவர்களாவார். மேலும் இருவர் இப் பாடசாலையில் பணியாற்றும் ஊழியர்களாவார்கள். 


இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் விபரம் 

01. பெரியசாமி விஜயரட்ணம் - வயது 40

02. விஜயரட்ணம் லோகானந்தா - வயது 39

03. விஜயரட்ணம் சிவகலா - வயது 16

04. விஜயரட்ணம் தனு - வயது 09

05. விஜயரட்ணம் விதுன் - வயது 07

06. பன்னீர்செல்வம் அழகுராணி - வயது 42

07. கணேசன் தனராஜ் - வயது 34

08. சந்திரசேகரன் கீர்த்திகா - வயது 10

09. சாமிக்கண்ணு கறுப்பையா - வயது 40

10. கறுப்பையா அன்னலட்சுமி - வயது 40

11. அழகன் சுப்பிரமணியம் - வயது 40

12. சுப்பிரமணியம் சரஸ்வதி - வயது 40

13. செல்வராசா கலாதேவி - வயது 34

14. சுப்பிரமணியம் தனலட்சுமி - வயது 54

15. சந்திரசேகரம் கார்த்திகா - வயது 10

16. இராஜேந்திரம் கலாவள்ளி - வயது 29


இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விபரம்

01. விஜயரட்ணம் கீர்த்திகா - வயது 13

02. விஜயரட்ணம் சோபிகா - வயது 14


தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா ஆழஊடுருவும் படையணி பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து, நோயாளர்காவு வண்டிகள் கூட சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது. 


தமிழினப் படுகொலை நாட்குறிப்பு

ஆவண வெளியீட்டுப் பிரிவு,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.