புதையுண்டு போன எமது வாழ்வுதனை மீட்டெடுப்போம்!!

 


அந்தியில் தாளாத துயரோடு

வழி மேல் விழிவைத்துக்

காத்திருக்கிறேன் 


எந்தன் மனமெனும் சோலையில் 

நித்தமும் 

பாடிய குயிலே 

சிறைக்கம்பிகளிற்குள்

அடைபட்டுப் போனாயே 


ஒரு வாசல்தனைத் திறந்து

மறுவாசலினை அடைத்துக்கொண்டதோ

பயங்கரவாதச் சட்டம் 


முப்பொழுதும் உன் நினைவினில்

பேச்சிழந்து தவிக்கிறேனே

எனக்குப் பிடித்து உன்னை மீட்டிட

கோவலனின் கண்ணகிபோல் 

நீதி கேட்டிட முடியாதவள் நானல்லோ 


உனக்காக காகிதமெழுதிய 

என் விரல்கள் தவிக்கிறதே

சிறை மீளும் நாளிற்காக

எந்தன் கருவறையிலும் நேசத்தை

நிரப்பிக் காத்திருக்கிறேன் 


நினைவுகள் அன்பினை

பிரசவித்துக்கொண்டிருக்கிறது

என்னவன் கரங்கள் விடுதலையாகாதோ 


ஒரு முறையாவது

கொடூர மனங்கள் இளகட்டும்

சிறைக் கதவுகள் திறக்கப்படட்டும்

திக்கெட்டும் வாசனை மலர்கள்

மலரட்டும்

காலைச் சூரியன் உதிக்கட்டும்

ஈரக்காற்று எனை ஆரத்தழுவிச் செல்லட்டும் 


வந்துவிடு 

மனதோடு கானலாக

புதையுண்டு போன எமது வாழ்வுதனை

மீட்டெடுப்போம்

வன்னி மண்ணின் மீது

மீண்டுமொரு முறை கை கோர்த்தபடி

நாம் பவனி வருவோம். 


#பிரபாஅன்பு#

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.