டைனோ என் தோழன்(சிறுவர் தொடர்கதை)!!


படுக்கையிலிருந்து எழுந்ததும் கைகளை கூப்பி, 'கடவுளே... பூமியில சகல ஜீவராசிகளையும் காப்பாத்துங்க' என, மனதில் வேண்டினான் சந்திரஜெயன்.

அவன், 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன். வீட்டுத் தோட்டத்தில், 20க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் பறவைகளை பராமரித்து வருகிறான். அவற்றுடன் அன்புடன் பழகுகிறான்.
அன்று அதிகாலையே பூனையும், நாயும் அவன் படுக்கையறைக்குள் நுழைந்தன; தியானத்தில் அமர்ந்திருந்த சந்திரஜெயனின் கால்சட்டையைப் பிடித்து இழுத்தன.
கூண்டிலிருந்தவாறு இனிய குரலில் வணக்கம் கூறியது பஞ்சவர்ண கிளி.
தியானத்தில் இருந்து விடுபட்டு, தோட்டத்திற்குள் நடந்தான் சந்திரஜெயன்.
மரத்துக்கு மரம் தாவியபடி பாய்ந்து அவன் கால்களை கட்டிக்கொண்டது, சின்சான் என அழைக்கப்படும் சிம்பன்ஸி குரங்கு.
புட்டத்தை, 'டிங்... டிங்...' என்று ஆட்டியபடி நெருங்கி
வந்து நெகிழ்த்தியது வாத்து.
அழகிய தோகையை விரித்து, வண்ணங்களை காட்டியது ஆண் மயில்.
தனக்கே உரிய, 'ட்ரேட் மார்க்' குரல் எழுப்பி சிரித்தது கழுதைக் குட்டி.
வாலை உயர்த்தியபடி சலாம் போட்டது அணில்.
கனிவுடன், ''அருமை மிருகங்கள் மற்றும் பறவைகளே... அனைவருக்கும் என் விடுமுறை நாள் வணக்கம். தங்குமிடம், உணவு பரிமாறுதலில் ஏதேனும் குறை இருந்தால், தெரிவியுங்கள்; களையப்படும். உங்களுக்குள் மனத்தாங்கல் மற்றும் சண்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து, உலகம் ஆச்சர்யப்பட வேண்டும்...'' என்றான் சந்திரஜெயன்.
மிருகங்களும், பறவைகளும் ஆமோதித்து ஒருமித்த குரல் எழுப்பின. அவை மகிழ்ந்து சிலாகித்தன. உடலை வளைத்து ஆட்டம் போட்டபடி, சமிக்ஞை செய்தது சிம்பன்ஸி.
அதன் தேவையறிந்து, ''சின்சானுக்கு, வாழைப்பழம் அதிகமா வேண்டுமாம்...'' என்றான் சந்திரஜெயன்.
''வாழைப்பழ மண்டில விட்டாலும், தின்று திருப்தி ஆக மாட்டான் சின்சான்...'' என்றபடி கூண்டை சுத்தம் செய்து, உணவையும், நீரையும் வைத்தான் பணியாளன் செந்தில்.
தொடர்ந்து காலைக்கடன்களை முடிக்க புறப்பட்டான் சந்திரஜெயன்.
குளித்து முடித்து, இடுப்பில் பூந்துவாலையோடு வந்தான்.
''வணக்கம்... குட்டி பாரதியாரே...'' என்றபடி, மீன் தொட்டியில் தங்க மீன்களை பார்த்தபடி இருந்தார் சந்திரஜெயனின் தந்தை மந்திரமூர்த்தி.
அவருக்கு வயது, 41; மீன் வளத்துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
''காலை வணக்கம் அப்பா...'' என்றான் சந்திரஜெயன்.
''உன் வளர்ப்பு பிராணிகள் எப்படி இருக்கின்றன...''
கேட்டார் மந்திர மூர்த்தி.
''மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன...''
''எதாவது தேவை என்றால் தயங்காமல் கேள்... உடனே, செய்து தருகிறேன். இயற்கைக்கு எதிராக நின்றால் வாழ்வதற்கு பதிலாக மனிதஇனம் அழிந்து போகக்கூடும்; நீயோ... இயற்கையோடு இயைந்து வாழ்கிறாய். நம் வீடு, பல்லுயிரின சாலை போல் காட்சியளிக்கிறது; இளைய தலைமுறைக்கு, நீ அழகிய முன் மாதிரி...''
''எல்லாம் தங்கள் ஒத்துழைப்பாலே தான்...''
சமையலறையில் இருந்து வெளிப்பட்டார் அம்மா. இருவருக்கும் காபி கோப்பையை நீட்டியபடி, ''விழித்திருக்கும் நேரமெல்லாம் மீன்களை பற்றி தான் ஆராய்ச்சி நடக்குது; படைத்த கடவுளுக்கு மீன்களின் பெயர் தெரியுமோ, தெரியாதோ... உன் அப்பாவுக்கு அனைத்தும் அத்துப்படி...
''கடல்ல பிளாஸ்டிக்கை கொட்டக் கூடாது என போர் கொடி வேற துாக்குறாரு; மகனை மிருகம், பறவை எல்லாத்துக்கும் நண்பனாக்கிட்டாரு... வளர்ப்பு பிராணிகள் மொழி தெரிந்த ஒரே மனிதன் நீ தான்; உங்க பழக்க வழக்கங்களால வீட்டில் சமையல் முறையே தலைகீழாகி விட்டது; அசைவத்திலிருந்து, சைவத்திற்கு மாறி, ஒரு முட்டை கூட சாப்பிட முடியல...'' என்றார்.
''அசைவம் சாப்பிடுறவங்கள, கையபிடிச்சு நிறுத்தல; சைவத்துக்கு நாங்க மாறிட்டோம்; அப்பா மீன் வளர்க்கட்டும்; நான் மிருகங்கள், பறவைகள் வளர்க்கிறேன்; பூச்செடி வளர்த்து அழகை பேணுங்கம்மா...'' என்றான் சந்திரஜெயன்.
''வீட்ல ரெண்டு பைத்தியங்களே போதுமடா சாமி... வீட்டுக்குள்ள இருக்குறது போலவா இருக்கு; அமேசான் காட்டுல வசிக்கிற மாதிரி இருக்கு...''
''அதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்மா...''
''உயிரினங்களின் கழிவு துர்நாற்றம் வீசுது... அதை தாங்க முடியலடா...''
''குழந்தையை வளர்க்கும் போது, நாத்தம், நறுமணமா தெரிந்ததா என்ன... அப்போ பொறுத்து போறீங்கல்ல; அந்த மனநிலையை பெறுங்கம்மா...''
''குரங்கு, நாய், பேயெல்லாம் குழந்தையா பாவிக்க என்னால முடியாது...''
''ஒருநாள், நீங்களும் எங்க கட்சிக்கு வருவீங்கம்மா...''
''அது நடக்காது...''
தீவிரமாக கூறினார் அம்மா.
''ஹாய் ஆன்டி... இங்க என்ன... குழாயடி சண்டை போல கேக்குது...''
பக்கத்து வீட்டு சிறுமி தீவிதா, சிரித்தபடியே அங்கு வந்தாள்.
தொடரும்...

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.