நாட்களும் யுகங்களாகவே....!

 


புன்னகையைத் தந்தவர்களிடம்

ஒரு துயரத்தைக் கொடுக்க

முடிவதில்லைத்தான்


ஒப்புக்கேனும்

பேச முற்படுவதும்

நினைவுகளுக்குள் உழள்வதும்

தொடரத்தான் செய்கிறது


புதிதான ஒரு உறவோடு

அனைத்தும் 

சீராகிவிடுமென நம்புகிறோம்

ஆனாலும் என்ன

பிரிந்து சென்றோரை பாதித் தூக்கத்தில்

தேடித் தொலையும்

சிறு பிள்ளைத்தனம் தொடரத்தான் செய்கிறது


பற்றிப் பிடித்து நிற்கும்

சாகாவரம் பெற்ற கவலைகள்

குமுறிக் கக்கும் எரிமலைக்கும்

அழிவதில்லையே


அதேபோல்

மீன் உதிர்த்துச் சென்ற

செதில்களின் தவிப்பை

யாராலும் உணர முடிவதில்லை


வாஞ்சையோடு அணைத்து நிற்கும்

நினைவுகளுக்கு

நாட்களும் யுகங்களாகவே....

சில்லறைத்தனமான 

சிறு சிறு சந்தோசங்களிற்காக

தொலைவாகிச் சென்றவர்களிடம்

மீண்டும் மீண்டும் மண்டியிட வைக்கிறது 

இந்த நேசம்.....!


-பிரபாஅன்பு-

யாழ்ப்பாணம்

29.05.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.