மேமாதம் காயல் நிலத்திலை கண்ணீரோட செந்நீர் ஓடினதெல்லே- உரையாடல்!!

 


மேமாதம்….

அது ஒரு பத்திரிகை அலுவலகம் . மதிய உணவுக்காக எல்லோரும் சென்றுவிட  செவ்வந்தியும் நாதினியும் மட்டும் வேலையில் மூழ்கியிருந்தனர். எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை முடித்துவிட்டு நிமிர்ந்த நாதினி அருகில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த செவ்வந்தியிடம் பேச்சு கொடுக்கின்றாள். அவர்களின் உரையாடல் இங்கு உங்களுக்காகவும்......


நாதினி : செவ்வி, ...முடிஞ்சுதா...சாப்பிடுற நேரம்....வா….போவம்….


செவ்வந்தி : ஓமக்கா...முடிஞ்சுது, ஆனால் சாப்பிடத்தான் மனமில்லை. 


நாதினி : ஏன்....சாப்பிடாமல் என்ன செய்யப்போகிறாய், ஏதாவது பிரச்சினையா? 


செவ்வந்தி :  பிரச்சினை என்னக்கா....நாட்டு நிலைமையை நினைச்சால்தான் மனம் கனக்கிறது. ...நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரச்சினை. 


நாதினி :  அது சரிதான்....ஒருமாதிரி புதுப்பிரதமர்  வரவு....சாமான் சட்டுகள் விலைகுறையும் என்று பார்த்தால் கடையில இன்னும் விலைகூடும் என்று சொன்னதைக் கேட்டதும் பயமாகிப் போட்டுது. 


செவ்வந்தி :  ஓமக்கா....புதுப்பிரதமருக்கு என்ன அமோக வரவேற்பா?  பலபேரின்ர எதிர்ப்புகளோடதான் அவரும் வந்திருக்கிறார். 


நாதினி :  அவருக்குப்பதில் இவர்....அப்பிடித்தானே நிறையப்பேர் சொல்லுகினம்...


செவ்வந்தி :    ஓமக்கா...உந்தப்படம் உங்க நிறையப் பேரிட்ட சுத்துது...நானும் பாத்தனான்…நல்லா                 அடிச்சிட்டு  அவர் போட்டார்….இவரிலையும் அவன்காட் வழக்கு இருக்கு போல…


நாதினி :  நேற்று பேருந்துக்கு நிக்கேக்க …பக்கத்தில சில உத்தியோகத்தர்மார் நிண்டவை….மகிந்தவின்ர மகன்மாருக்கு முழு வெளிநாட்டிலையும் பெரிய பெரிய வியாபாரங்கள் இருக்குதாம்…அதோட  , உந்த திரைப்படத்துறையிலையும் நிறைய முதலீடு செய்திருக்கினமாம்…அது ஏனெண்டு உனக்கு விளங்குதுதானே….அவையள் கதைச்சதைக்கேட்க  எனக்கு  அதை உடனே எழுதவேணும் போல இருந்தது. இண்டைக்கு எழுதின கட்டுரை அதை வைச்சுத்தான்…


செவ்வந்தி :    ஓமக்கா….விளங்குது..விளங்குது…அவைக்கு நீங்கள் பத்திரிகை பணியாளர் எண்டு தெரியாது     போல….பத்திரிகை பணியாளனுக்கு எல்லாம் கருதானே….அதுலையும்  இது முக்கியமான கரு, நீங்கள் விடுவியளே….


நாதினி :  ஓம்..செவ்வி, இப்ப இன்னுமொரு விசயமும் ஓடுது, பாத்தனியே, ?


செவ்வந்தி :    என்ன விசயமக்கா….?

நாதினி   : முள்ளிவாய்க்கால் தினத்தில புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம்…இதை இந்து நாளிதழ் வெளியிட்டிருக்குதாம்….


செவ்வந்தி :    அட  நாசத்தை….பதின்மூண்டு வருசமாப்போச்சு, இன்னும் புலிப்பூச்சாண்டி ஓயேல்ல…..இந்தியா எங்களை ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டுது போல….உவர் சுப்பிரமணியம் சுவாமியின்ர வேலையாத்தான் இருக்கும். இல்லாட்டி , மகிந்தவைக் காப்பாத்த நடத்துற நாடகமோ,?


நாதினி   : அதிலையும்  இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்துப்பணியிலையாம்…. 


செவ்வந்தி :    அடிசக்கை…..முள்ளிவாக்கால் நினைவு தினத்திலை ஒரு இப்பிடி ஒரு கதை    கிளப்பிவிட்டிருக்கினம் போல…..


நாதினி : எங்கட சனத்துக்கு இப்ப எல்லாம் நல்லா விளங்கிப்போச்சுது, நாங்கள் அமைதியாத்தான் இருப்பம், 


செவ்வந்தி :    அக்கா …தம்பியின்ர சினேகிதங்கள் நேற்று கதைச்சுக்கொண்டிருக்கினம்,  எரிச்ச அரசியல்வாதிகளின்ர வீடுகளிலை எல்லாம் லட்சக்கணக்கிலை பெறுமதியான நாய்கள் தான் நிண்டதாம்….


நாதினி :  அதுதானே நாங்கள் இப்ப தெருவில நிக்கிறம், அத்தியாவசிய உணவு கூட இல்லை, எத்தினை வீடுகள் பட்டினியில கொதிக்குது தெரியுமே, 


செவ்வந்தி  : அரசியல்ல எல்லாரும் அடிக்கிறது தான்..ஆனால் இவையள் ஓவரா அடிச்சிட்டினம்….அதுதான் இப்பிடி மாட்டுப்பட்டது. 


நாதினி :   சொந்த நாட்டையே சுடுகாடாக்கின  பலன் ராஜபக்ச குடும்பத்தைத்தான் சேரும்…வினை விதைச்சால்…


செவ்வந்தி  :  அக்கா….அண்டைக்கு எங்களுக்கு..இண்டைக்கு அவையளுக்கு…எரிஞ்சு கிடந்த வீடுகளைப் பாக்க சுப்பர் சொனிக், புக்காரா அடிச்சு எங்கட வீடுகள் எரிஞ்சதுதான் நினைவில வருகுது. கொத்துக் குண்டுகளை இப்ப நினைச்சாலும் குலை நடுங்குதெல்லே….காயல் நிலத்திலை கண்ணீரோட  செந்நீர் ஓடினதெல்லே….இப்ப என்ன மாதம் பாத்தியளே….


நாதினி :  ஓமோம்…அதை நினைச்சா நித்திரையும் வராது…. சாப்பிட மனமில்லை….தலையும் இடிக்கிது,..வா…. முகம் கழுவிப்போட்டு  கடையில இஞ்சி தேனீர் குடிச்சிட்டு வருவம்…


இருவரும் எழுந்து நடக்கின்றனர்.


ஆக்கம்  

கோபிகா 

யாழ்ப்பாணம்

15,05,2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.