13 வருடங்களின் பின்னர் சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் விடுவிப்பு!!


 13 வருடங்களின் பின் சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் இன்று (25.05.2022) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது விடுதலை குறித்து சட்டத்தரணி திருமதி மங்களேஸ்வரி- சங்கர் தனது முகநூலில் பதிவிடுகையில், 

 கேதீஸ்வரனை பூசா தடுப்பு முகாம் மற்றும் மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த காலப்பகுதியில் அவருக்கான சட்ட உதவியினை வழங்குவதற்காக CHRD அமைப்பினூடாக அவரை நேரில் சந்தித்து சட்ட ஆலோசனை வழங்கி இருக்கின்றேன்.

ஒரு முறை நானும் சட்டத்தரணி கணேஸ்வரன் அவர்களும் கேதீஸ்வரனைச் சந்திப்பதற்காக மொனராகலை சிறைச்சாலை சென்றபோது அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி இருந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்

களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் கடந்த 18. 03. 2009 அன்று திருக்கோயிலில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. கைதின் போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை அவரிடம் ரூபாய் 340/= பணமும் ஒரு பிஸ்கட் பக்கெட் மட்டுமே இருந்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரிடமிருந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது. அதுவும் கடுமையான சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பெறப்பட்டு இருந்தது.மேலும் தமிழ் மொழியில் நன்கு பரிச்சயம் இல்லாத ஒருவரே அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்திருக்கிறார். சித்திரவதைக்கு உள்ளானதால் ஏற்பட்ட காய தழும்புகளை கூட சட்ட வைத்திய அதிகாரியானவர் சரியாக பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

இவ்வாறான கரிசனை கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் இருந்தபோதிலும் கூட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட மொனராகலை மேல் நீதிமன்றம் இவருக்கு 15.06.2017 அன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மொனராகலை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு நிராகரிக்கப்பட்டு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

அவரது விடுதலைக்காக அயராது பாடுபட்ட CHRD அமைப்பின் சட்ட ஆலோசனை குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.