ஜப்பான் தயாரித்த சிறிய ரோபோ

 


ஜப்பானை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனம்  நிலவில் ஆய்வு செய்ய 250 கிராம் எடையில் சிறிய ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக சிறிய அளவிலான ரோபோவை ஜப்பான் நிறுவனம் “டோமி” தயாரித்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், அடுத்த ஆண்டு ஒரு விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. அதனுடன் அனுப்புவதற்காக, 250 கிராம் எடையில் 8 சென்டி மீட்டர் விட்டத்தில் ஒரு சிறியரக ரோபோவை ஜப்பானைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் தயாரித்துள்ளது.

சோரா-க்யூ என்று அந்த சிறிய ரக ரோபோவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மைனஸ் 170 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கக்கூடிய வகையில் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ள அந்த குட்டி ரோபோவில் இரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் எடுக்கப்படும் படங்கள் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

டோமி நிறுவனத்தின் பணியாளரும் சோரா-க்யூ டெவலப்பருமான கென்டா ஹஷிபா குழந்தைகளுக்கான பொம்மைகளை தயாரிப்பதில் தங்களின் அனுபவமும் நுட்பங்களும் இந்த ரோபோவை உருவாக்க உதவியதாக தெரிவித்துள்ளனர். விண்வெளிக்கு செல்லும் ரோபோவைப் பார்த்து குழந்தைகள் விண்வெளியில் ஆர்வம் காட்டினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான “JAXA” சந்திர லேண்டரான SLIM (Smart Lander for Investigating Moon) இல் இந்த ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.