எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்!
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலக வாயிலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. அதனால் பதாகை சிறு சேதங்களுக்கு உள்ளானது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். தமது அரசியல் தேவைக்காக உசுப்பேற்றுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.
இங்கு வன்முறைகள் இடம்பெற்றால் பாதிக்கப்படுவது எங்கள் மக்களே. நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்.
யாழில் எனது அலுவலகம் எரிக்கப்பட்டது என பரவும் தகவல்கள் தவறானவை என்பதோடு, அலுவலக பதாதையிலும் சிறு பகுதி மாத்திரமே வன்முறையை தூண்டும் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்செயலூடாக யாழில் வன்முறையை தூண்டி குளிர்காய நினைப்பவர்கள் தமது அரசியல் கோழைத்தனத்தை கைவிட வேண்டும். வரலாறு சொல்லும் தமிழர் வீரங்கள் இந்த கோழைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாது.
நாட்டில் அமைதிவழி போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளை நாம் கண்டித்துள்ள நிலையில் எம்மீது தாக்குதல் நடாத்தி தமது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை ஒரு தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நாட்களில் நாட்டின் அமைதி நிலவும் பகுதிகளாக வடக்கு மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் இருக்கும்போது நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் அவசரகாலச்சட்டம், பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கருத்தில்கொள்ளாது இந்த அமைதியை சீர்குலைத்து அதனூடாக தமக்கான நிதிமூலங்களை பலப்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகளாலும், அதன் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட சமூகவிரோத செயலே இதுவாகும்.
இருப்பினும் இதனை காட்டிக்கொடுத்து எங்கள் இளைஞர்களை நாம் எப்போதும் நெருக்கடிக்குள் சிக்கவைக்க மாட்டோம். ஆனால் இந்த கீழ்த்தரமான அரசியல் வலைக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று எனதருமை யாழ் மாவட்ட மக்களை முதலில் கேட்டுக்கொள்கின்றேன்.
தமக்கெதிராக மாற்றுக்கருத்துடையோர் செயற்படக்கூடாது என்பவர்களும், தமக்கு எதிராக யாரும் செயற்படகூடாது என்றும் அதனால் தமது வெற்றி பறிபோகிறது என்பவர்களும், மக்களின் கண்ணீரை வைத்து அரசியலில் பிழைப்பு நடாத்துபவர்களும், தேர்தலோடு ஒற்றுமையை இழந்தவர்களும் இந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு எங்களையும் எங்கள் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தி எம்மை விலக்கினால் தமது பாதை தெளிவாகும் என்ற தப்பெண்ணத்தை அவர்கள் கொண்டுள்ளார்கள். அது சாத்தியப்படாது.
நாட்டில் அமைதிவழி போராட்டகாரர்களை பாதுகாக்கும் செயலில் தெற்கிலுள்ள சட்டவல்லுனர்களும், புத்திஜீவிகளும் திரண்டுநிற்கும்போது, இங்குள்ள சிலர் சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் கருத்துக்களை வெளிப்படுத்திவருவதானது எத்தகைய மனப்பாங்கை அவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
எமது யாழ் மக்களுக்கான அபிவிருத்தியை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் நான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் அதற்கான ஆணையை வழங்கியபோது, மக்களின் ஆணையை நிறைவேற்றுவதை நோக்காக கொண்டு செயற்பட்டவன் நான். மக்களுக்கு ஒன்றைச் சொல்லி, தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களை ஏமாற்றி நாடகமாடும் சிலரை போல நான் செயற்பட்டதில்லை. மக்களுக்கான அபிவிருத்தியை அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெறுவதை நான் நோக்காக கொண்டு செயற்பட்டேன்.
கடந்த பொதுஜன பெரமுன அரசாங்கத்தில், பொதுஜன பெரமுன அல்லாத உறுப்பினரும், அவர்களின் சின்னத்தில் போட்டியிடாத உறுப்பினருமான நான் எனது மக்களுக்கான அபிவிருத்திகளை வென்றெடுப்பதில் எத்தனையோ தடைகளை எதிர்கொண்டேன். அவற்றையெல்லாம் பொறுமையோடும், நேர்மையோடும் கையாண்டு கடந்த காலங்களில் மக்கள் சேவையாற்றியுள்ளேன்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் நான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமானது மக்களை தவறான பாதைக்குள் அழைத்துச் செல்கிறது என்பதையும், மக்களுக்கான அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க முடியாது என்பதையும் உணர்ந்து அரசாங்கத்தின் பங்காளித்துவத்திலிருந்து எனது கட்சியை மீட்டு மக்களுக்கு நேர்மையாக செயற்பட வேண்டும் என்பதில் அர்ப்பணிப்போடு செயற்பட்டிருந்தேன்.
மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாங்கத்தை வெளியேற்றவேண்டும் என தீவிரமாக செயற்பட்டு வருபவர்கள் நாங்கள். மக்கள் படும் துன்பங்களை நேரில் கண்டவர்கள் நாங்கள். மக்களுக்கான அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்பதில் தீவிரமாக நாம் செயற்பட்டுவருகிறோம்.
இந்த விடயங்கள் மக்களை சென்றடைய கூடாது என்பதிலும், தமது அரசியல் இயலாமையை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற குறுகிய மனப்பாங்குடையவர்களுமே இங்கு என் மீதான தாக்குதல் எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்ட எத்தனித்துள்ளனர்.
எனது மக்களுக்காக, என் மக்களும் பெறவேண்டிய அபிவிருத்தி உரிமைகளை அரசாங்கத்துடன் இணைந்திருந்து பெற்று கொடுத்தமையானது தவறு எனில் அந்த தவறை, இங்குள்ள ஏனைய அரசியல்வாதிகளைக்காட்டிலும் நான் அதிகமாகவே செய்துள்ளேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் மாறலாம். ஆனால் எம் கனவு யாழ் நோக்கிய பயணம் எம்மக்களுக்காக எப்போதும் தொடரும். இது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க ஏங்கும் என் உறவுகளின் கனவு.
அரசாங்கத்துக்கு எதிராக அமைதியாக போராடிவரும் போராட்டகாரர்களுக்கு எமது ஆதரவை நாம் வழங்கியுள்ள நிலையில், இதனை வன்முறை கொண்டு அடக்க நினைப்போருக்கு உதவி செய்யும் விதமாக எங்கள் பகுதிகளிலும் சிலர் செயற்படுகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து அவர்களை இனங்காண வேண்டியது அவசியமாகிறது.
எனவே அண்மைய நாட்களில் எமது மக்கள் அனுபவித்துவரும் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களை துன்பப்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சியினரையும், தனிப்பட்ட குழுக்களையும், தனிநபர்களையும் உளமார கேட்டுக்கொள்கிறேன்.
மாறாக வன்முறையே தீர்வென எண்ணினால் அதை தமிழர் வீர மரபோடு எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன். வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆனால் இன்று என்மீது கற்களையும் நெருப்பு பந்தங்களை வீசுவோரை நோக்கி காலம் தனது கரங்களை தனது மக்களை கொண்டே நீட்டக் காத்திருக்கும். இதுவே இன்று தெற்கில் நிதர்சனமாகியுள்ளது என்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை