உணவு வேளையில்...! - குட்டிக்கதை

 விமானப் பயணம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவர் கனடாவிலிருந்து லண்டனுக்குக் கப்பல் பயணம் மேற்கொண்டார்.

பகலுணவு வேளையின் போது, அந்த ஆங்கிலேயர் அந்தக் கப்பலில் இருந்த உணவகத்தில் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சென்று அமர்ந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒருவர் அவரைப் பார்த்து, போனப்பேத்தி என்றார்.

அதைக் கேட்ட ஆங்கிலேயர், தனது பெயரைத்தான் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டு வில்லியம் நார்ட்டன் என்று தனது பெயரைச் சொன்னார். அவர்களிருவரும் அதற்கு மேல் பேசிக்கொள்ளவில்லை.

இரவுணவு சமயம் வந்தது. ஆங்கிலேயர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்தார். அப்போதும் அவர் எதிரிலிருந்தவர் போனப்பேத்தி என்றார். ஆங்கிலேயருக்கு எரிச்சலாக வந்தது, மதியம்தான் தனது பெயரைச் சொல்லி விட்டோமே... மீண்டும் தனது பெயரைக் கேட்கிறாரே என்று நினைத்துக் கொண்டு வில்லியம் நார்ட்டன் எனச் சொன்னார்.

மறுநாள் காலை உணவு வேளையிலும், அவர் போனப்போத்தி என்று சொல்ல, இவர் வில்லியம் நார்ட்டன் என்று மிகுந்த கடுப்புடன் சொன்னார்.

தனது உணவை முடித்துக் கொண்ட ஆங்கிலேயர், கப்பல் மாலுமியைச் சென்று பார்த்தார். உணவகத்தில் தனக்கான இருக்கையை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டார்.

கப்பல் மாலுமி, “ஏன் உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“உணவு வேளையில் எனக்கு எதிரே அமர்ந்திருக்கிற பைத்தியக்காரர் ஒவ்வொரு தடவையும் தனது பெயரைச் சொல்லி எனக்கு எரிச்சலூட்டுகிறார். அவரிடம் நான் பல முறை என் பெயரைச் சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் அவர் அப்படிச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை” என்றார் அந்த ஆங்கிலேயர்.

“அப்படியா...? அவர் உங்களிடம் என்ன பெயர் சொன்னார்?”

“போனப்பேத்தி”

மாலுமிக்கு விஷயம் புரிந்தது.

“நண்பரே அது அறிமுகமல்ல. நீங்கள் குறிப்பிடும் நபர் பிரெஞ்சுக்காரர் போல் தெரிகிறது. அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு போனப்பேத்தி என்று சொல்வது அவர்கள் வழக்கம். போனப்பேத்தி என்றால் அவர்கள் மொழியில் நல்ல பசி என்று பொருள். உங்களுக்கு நல்ல பசி உண்டாகட்டும்... நிறைய சாப்பிடுங்கள் என்று அவர் உங்களை அவரது மொழியில் வாழ்த்துகிறார். நீங்கள்தான் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்" என்றார் கப்பல் மாலுமி.

“அப்படியா? மன்னிக்க வேண்டும். நான் அவர் என் பெயரைத்தான் அடிக்கடி கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்” என்று சொல்லியபடி திரும்பினார் அந்த ஆங்கிலேயர்.

பகலுணவு மணியடித்தது.

அந்த ஆங்கிலேயர், இப்போது தான் முந்திக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து தனது இருக்கையில் வேகமாகப் போய் அமர்ந்து கொண்டார்.

அந்தப் பிரெஞ்சுக்காரர் வந்ததும் அவரைப் பார்த்து, “போனப்பேத்தி” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

அவரும் சிரித்துக் கொண்டே, “வில்லியம் நார்ட்டன்” என்றார்Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.