பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்?


பெண்களைத் தனித்த உயிரியாக, உரிமையுடையதாக சொல்லாலும் செயல்களாலும் பாதிப்புகளுக்கு உள்ளாகாத தற்காப்புடையதாக, தன் வாழ்வை தானே நிர்ணயிக்கிற சுய சிந்தனை உடையதாக மாற்ற / இருக்க / இயங்க வழிகோலும் கருத்துக்களுக்கு இடமளிக்கும் இயம் பெண்ணியம்.


குளிர்சாதனப் பெட்டி = பெண்

ஒரு கடையில் உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதற்காக புதிய குளிர் சாதனப் பெட்டி ஒன்றைக் கடைக்காரர் வாங்குகிறார். அது பார்க்கச் சிவப்பாக அழகாக இருக்கிறது. தேவையானபோது அது கடைக்காரரைக் குளிர்பானங்களைத் தந்து குளிர்விக்கிறது. அவற்றை மற்றவர்களுக்கும் அளித்து மகிழ்கிறது. தேவையான பொருள்கள், தேவையற்ற பொருள்கள், அழுகின பொருள்கள், அழுகாத பொருள்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அது கடைக்காரரின் நன்மைக்கே இயங்கி வருகிறது. இதற்கும் தற்காலப் பெண்களுக்கும் எத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன. நிறம், குளிர்வித்தல், சுமத்தல் இவை அனைத்தும் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள். கடைக்காரரின் நன்மைக்கே இயங்குதலும், கணவனின் நன்மைக்கே இயங்குதலும் மிகச் சிறந்த ஒற்றுமை. என்றாவது ஒருநாள் கடைக்காரர் குளிர்சாதனப் பெட்டியின் மீது கரிசனம் கொண்டிருப்பாரா? அல்லது அதனைக் கேட்டு ஒரு பொருளை வைக்க, எடுக்க முயன்றிருப்பாரா? இருக்க முடியாது. அது தேவையில்லை. தான் வாங்கிய பொருள் தனக்கே. . . அது முற்றிலும் உழைக்க வேண்டும் என்ற அவர் எண்ணுவது இயல்பு. இதைவிடக் கொடுமை. குளிர்சாதனப் பெட்டி தன் வேலையில் குறைவு பட்டுவிட்டால் உடனடியாகக் கடைக்காரரால் இந்தப் பெட்டி தூக்கியெறியப்படும். அதன்பின் புதிதாக ஒன்று வரும். அதுவும் கடைக்காரருக்கே உழைக்கும். கூடுதலாக ஒரு மின்சமப்பெட்டியையும் ( stabilizer) வாங்கி வைத்து விடுவார். அந்தக் குளிர்சாதனப் பெட்டி இன்னும் கூடுதலாக உழைக்கும். இந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் தற்காலப் பெண்களின் சூழலும், இந்தக் குளிர் சாதனப் பெட்டியின் இயல்பும் மிகப் பொருந்தி நிற்பது புரியும். பெண் உயிரினமாகக் கூட கருதப்படாமல் ஏதோ ஒரு பொருளின் இயல்பில் அவர்களை வாழவைக்கும் சுயமற்ற போக்கு மாறவேண்டும் என்றே பெண்ணியம் விரும்புகிறது. பெண் ஒரு பொருள் அல்ல. அவளுக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளன. அவளின் பொருளை, உடலை அவள் விருப்பப்படி பயன் கொள்ளலாம். துய்க்கலாம். அதற்கான பல முன்னெடுப்புகளை பெண்ணியவாதிகள் முன்வைக்கின்ற போதும் பெண்ணிய எழுச்சிகள் இன்னும் சரிவர வந்து சேர்ந்த பாடில்லை.

பெண் அனுபவிப்பின் தளமல்ல

அமெரிக்கா முதல் அந்தமான் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்ணைச் சொல்லாலும், செயலாலும் இழிவு படுத்தும் போக்கு குறையவே இல்லை. அமெரிக்க அரசியல் மையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்குப் பல சோதனைகள் நடத்த வேண்டியிருக்கிறது. காஷ்மீர்ப் பெரியவர்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளாக அனுப்பப்பட்ட பெண்கள் இறந்ததும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அரசியல் அரங்கம் ஆட்டம் கொள்கிறது. அனுப்பப்பட்ட பெண்கள் ஓரினச் சேர்க்கையர் என்பதும், அவர்களை அனுப்பியது ஒரு பெண் தலைமையிலான கூட்டம் என்பதும் கூடுதல் வருத்தத்தைத் தரும் செய்திகள். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மகனை அம்மாவே நறுக்கிய கதை மனத்தை உலுக்குகிறது. கள்ளக்காதலி வீட்டுக்கு வர அவளை உண்மை மனைவியும் கணவனும் இணைந்து கொல்கிறார்கள். காதலன் முன்பே அவனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த பெண் பிற ஆண்களால் விருப்பமின்றித் தன்னை இழக்கிறாள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஆண் பெண்களை சாகடித்துக் கொன்று அதன்பின் அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறான். தன்னைக் குடித்துத் துன்புறுத்திய கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி, நறுக்கி வீட்டுத் திண்ணையாக்கிய மனைவி . . . இப்படி விரியும் நாளிதழ்ச் செய்திகள் எதை உணர்த்துகின்றன. இந்நிகழ்வுகள் அனைத்திலும் பெண்ணும் இடம் பெற்றிருக்கிறாள். ஆண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண்ணை அழகின் இருப்பிடமாக, அனுபவிப்பின் தளமாகக் காண்கிற, கொள்கிற ஆணின் புத்தியாலேதான் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆணின் புத்திக்குப் பெண்ணும் துணை போகிற போது அவளும் ஆண் தன்மையைப் பெற்றவளாகவே மாறிவிடுகிறாள்.

ஆண்சூழலில் வாழுபவள் பெண் அல்ல

ஓர் ஆண் தன்னோடு பழகிய ஆண்களைப் பார்க்கிற போது / பழகாத ஆண்களைப் பார்க்கிற போது கவர்ச்சிகரமான சிந்தனை ஏற்படுவதில்லை. ஆனால் அவனே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கவர்ச்சி கொள்கிறான். அவளை அடைந்து விட முயல்கிறான். அவளை அடைய வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஓர் பெண் தன்னோடு பழகிய பெண்களை / பழகாத பெண்களைப் பார்க்கிற போது கவர்ச்சிக்கு ஆட்படுவது இல்லை. ஆண்களைப் பெண்கள் பார்க்கிற பார்வையில் ஓரளவிற்குக் கவர்ச்சிக்கு ஆட்பட்டாலும் அது அவர்களை அடைய வேண்டும் என்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில்லை. ஆண்களிடத்தில் உள்ள பயன்படுத்துதல் என்ற ஒன்றே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும், ஆணாதிக்கத்திற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது

பெண்ணுக்கு எதிரான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் தகவல் தளங்களும் செய்திகளை வெளியிடுகையில் ஆண் சார்புத் தன்மையுடனேயே வெளியிடுகின்றன. "கள்ளக்காதலால் மகனையே கொன்ற தாய்" என்ற ஒரு தலைப்பு, செய்தித்தாளில் வந்த தலைப்பு ஆகும். இந்தச் செய்தியை எழுதியவர் ஓர் ஆண் என்பது அதன் தலைப்பிலேயே தெரிந்து விடுகிறது. கள்ளக்காதலுக்குக் காரணமான, உடந்தையான ஆணே கள்ளக்காதலியின் மகனைக் கொல்லக் காரணமாக இருந்தாலும், அவன் இத்தலைப்பிற்குள் மறைந்து கொள்கிற ஒரு பக்க சார்பைப் புரிந்து கொண்டால் இதனுள் இருக்கும் ஆணாதிக்கம் புரிய வரும். எனவே இக்கால நிலையில் குழப்பான சூழலில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆண் சூழலுக்குள் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை. இவர்களை மீட்டுத் தன்னை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டிய பெண்ணியம், பெண்ணியவாதிகள் செய்தது என்ன? செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும்.

பெண்கள் பள்ளிக்கூடம், பெண்கள் கல்லூரிகள், பெண்கள் பல்கலைக்கழகங்கள் போன்றன தொடங்கப் பெற்று விட்டன. இவற்றில் பெண்களே வேலை பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். தோட்டக்காரர்கள் முதல் துணைவேந்தர் வரை பெண்கள்தான். என்றாலும் அவர்கள் படிக்கிற படிப்பு பெண்ணுக்குச் சாதகமானதா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க வேண்டும். பாடதிட்டம், அதற்குள் இடம் பெறும் பாடங்கள், அதனை எழுதிய ஆசிரியர்கள் ஆகியனவற்றை ஆராய்ந்துப் பார்த்தால் பத்து விழுக்காடு கூட பெண்கள் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பிருக்காது. ஆணின் பாடங்களைப் படித்து வரும் பெண்கள் எப்படி உண்மையான பெண்களாக இருக்க இயலும். பெண்களே எழுதும் புத்தங்கள், தொகுக்கும் புத்தகங்கள் வந்துவிட்டன. எனினும் பெண்கள் தொகுக்கும் புத்தகங்களில் பெண்களுக்கு உரிய சாதகமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளனவா என்பது கேள்விக்குறிதான். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானல் தற்போது சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள பெண் மையக் கதைகள் தொகுப்பில் ஆண்களோடு பெண்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் பெண். இவர் எப்படி ஆண் கதைகளைப் பெண்களுக்குச் சாதகமானதாக ஏற்று அவற்றைத் தொகுக்க இயலும். ஆண்கள் எவ்வளவு விழிப்பாக எழுதினாலும் அதற்குள்ளும் ஆணாதிக்கக் கருத்து வந்து புகுந்து கொள்ளும் என்பது தான் உண்மை. புறச்சூழலை மாற்றி அமைக்க முடிந்தால் மட்டுமே, அல்லது புறச்சூழல் மாறினால் மட்டுமே பெண் உண்மையான பெண்ணாக வலம் வர இயலும்.

பெண்ணியத் தோற்றமும் மாயையும்

பெண்ணியம், பெண்ணியவாதிகள் என்பதற்கான பொருள் தமிழ்ச்சூழலில் வேறுமாதிரியாகத் திரிக்கப் பெற்றுள்ளது. இத்திரிப்பிற்குக் காரணம் ஆண் விமர்சகர்கள். பெண்ணியம் என்பதை ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் கொள்ளும் காம உணர்வு என்பதே பல ஆண் விமர்சகர்களின் கருத்து. மணமுறிவு பெற்றவர்கள், மணமாகாதவர்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதும் மேற்சொன்னது போன்றதொரு தவறான பார்வையாகும். உண்மையான பெண்ணியவாதிகள் என்பதான எண்ணத்தை எட்டவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆக வேண்டி இருக்கும். ஆண்களின் தோழியாக வாழும் பெண்கள், ஆண்களின் பராமரிப்பில் இருக்கும் பெண்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்ற தவறான எண்ணமும் தமிழ்ச்சூழலில் விளங்கி வருகிறது. இவற்றில் இருந்து உண்மையான பெண்ணியத்தை, பெண்ணியவாதிகளை இனம் கண்டறிய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படித் தேடிப்பார்த்தால் உண்மையான பெண்ணியம் என்பதும், உண்மையான பெண்ணியவாதி என்பதும் கிடைக்காமல் கூடப் போகலாம்.

சக பெண்களை முன்னேற்றும் பெண் பெண்ணியவாதி ஆவாள். அவள் எலைன் ஷோவால்டர் சொல்வது போன்று சகோதரித்துவ குணம் பெற்றவளாக இருப்பாள். தனக்கு எதிராக நடந்த இழப்புகளை, அவமரியாதைகளை தன் சகோதரி அனுபவிக்காமல் காப்பவளே உண்மையான பெண்ணியவாதி. மேலை நாடுகளில் உங்கள் எதிரியோடு உறங்குகிறீர்கள் என்று கூறி படுக்கையறையை விட்டு வெளியேறிய பெண்களின் போராட்டம் தரும் கருத்து என்ன? என்றைக்கும் ஆண் ஆணாகவே இருப்பான். அவன் பெண்ணைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். அவன் உறவின்றி நாமே நமக்கான வாழ்வைத் தொடங்குவோம் என்பதுதான்.

குடும்பத்தில் பிறந்த பெண் குடும்பத்தவளாக வாழ்கிற போது பல அனுசரிப்புகளுக்கு உள்ளாக வேண்டியவளாக இருக்கிறாள். அப்படி வாழ்வது சரியென வாழும் பெண்களின் வாழ்வில் பெண்ணியம் நுழைந்து அவர்களைக் கெடுத்து விடப் போவதில்லை. ஆனால் குடும்பத்தில் சம உரிமையை நிலைநாட்டப் பெண்ணியம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மின்னல் பூக்கள் என்ற நாவலில் இறந்த பெற்றோருக்கு ஆண் இறப்புக் கடன் செய்வது போல பெண்ணும் செய்யலாம் என்பதை திலகவதி முன் வைக்கிறார். அவரே சொப்பன பூமி நாவலில் அச்சகத் தொழிலில் உள்ள ஆண், பெண் தொழில் மதிப்பு வேறுபாட்டைக் களைய முன்வருகிறார். குடும்பச் சூழலை முன்வைத்து பெண்களை முன்னேற்றும் தற்கால போக்கு ஒருபுறம் தற்போது தமிழ்ப் பெண்ணியத்திற்குத் தேவையாகின்றது.

மணம் வேண்டாத, ஆண்துணை வேண்டாத, தன்னையே நம்பி, தன் உழைப்பினைத் தனக்கே உரிமையாக்கிடத் துடிக்கும் தனித்த பெண்நிலைக்கும் இக்காலத்தில் விதை இட வேண்டி இருக்கிறது. இவ்வாறு தனித்துப் போனால் உலகம் இயங்காது. உற்பத்தி பெருகாது என்ற மரபுக் குரல்கள் வாடகைக் கருப்பைத் தாய்களாலும், வாடகை ஆண் விந்தணுக்களாலும் மறைந்து போய் விட்டன. தேவைப்பட்டால் தந்தை தாய் – யார் யாரெனத் தெரியாமல் புதிய உற்பத்திக் கோட்பாடுகளை மருத்துவம் உருவாக்கி வருவது இந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளியை வைத்து விடும்.

இதுவும் அல்லாமல், அதுவும் அல்லாமல் இரண்டுங்கெட்டான் ஆகிவிட்ட பெண்ணியத்தை பெண்ணிய மாயை என்றே குறிக்க இயலும். ஆடைகளில் விடுதலையைத் தேடி ஆண்களின் ஜீன்ஸ்களில் நல்லதைத் தேடுதல் உண்மையான பெண்ணியமாகாது. காமத்தில் விடுதலை தேடி ஆண் குழுவோடு தன்னை இணைத்துக் கொள்ளும் குழு விளையாடல்கள் உண்மையான பெண்ணியமாகாது. இதில் வீழ்ந்து கிடக்கும் தற்போதைய தமிழ்ப் பெண்ணிய உலகைக் கண்டிப்பான கரங்கள் கொண்டுத் தூக்கியே நிறுத்த வேண்டும்.


ஆணாதிக்கம்

எழுதுதலும், வெளியிடுதலும் ஆணாதிக்கக் கரங்களில் தற்போது உள்ளன. ஆனந்த விகடன் வெளியிடும் புதிய புத்தகங்களில் பெண்களின் புத்தகங்கள் எத்தனை என்பதை எண்ணினால் இது தெற்றெனத் தெரியும். காலச்சுவடு தான் கண்டறிந்துள்ள பெண் எழுத்தாளர்களைத் தவிர வேறு பெண் எழுத்தாளர்களே உலகில் இல்லை என உண்மை பேசும். தன் கைக்காசு செலவழித்து ஆண் வெளியீட்டகத்தில் கவிதைத் தொகுதிகள் போட்டுச் சில பெண்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. இணைய தளங்களில் உண்மையான பெயர்களில், உண்மையான புகைப்படங்களுடன் பெண்கள் உலா வர இயலாது. வந்தால் பின்னூட்டங்களில் பல இடைஞ்சல்கள் வரும். அம்பை எழுதிய முகமுடிகளுக்குப் பின்னால் முகங்கள் (The face behind the mask) பெண்கள் தம் சொந்தப் பெயரில் எழுதாமைக்கான பல காரணங்களை முன் வைக்கிறது. இதே சூழல்தான் தற்போது இணையத்தில் உள்ள பெண்களுக்கும். இணையத்தில் வெளியான ஒரு பெண்ணின் புகைப்படத்தையும், ஒரு குழந்தையின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதி இன்றிப் போட்டு விட்டு தற்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதை வெளியிட்ட விளம்பரக் குழு மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கண்டிப்பினைக் காட்டியிருக்கிறது. இந்தச் சூழலில் வெளியீட்டுத் தளங்கள் ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதில் ஒரு சிறிதும் மாறுபாடு இல்லை. ஆண்களின் வெளியீட்டுச் சாதனத்துக்குள் பெண் எவ்வாறு விடுதலையுடன் செயல்பட முடியும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்ப் பெண்ணியம் சுருக்கமான வரலாறு என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர்தம் கட்டுரையின் ஒவ்வொரு வரிக்குள்ளும் எள்ளல் நிறைந்திருக்கிறது. பெண் எழுத்தாளர்களைக் கேலி பேசும் மேதாவிக்குணம் நிறைந்திருக்கிறது. அவர் பிரிக்கும் பல்வேறு பெண்ணியக் காலகட்டங்களின் பெயர்களில் உள்ள கேலித்தன்மையை உங்களுக்குச் சுட்ட விரும்பிகிறேன். அவர் தமிழ்ப்பெண்ணியத்தைப் பின்வரும் உட்பகுப்புகளாகப் பிரித்துக் கொள்கிறார்.

1. கொண்டைக்காலம்( 1950 ஆம் ஆண்டுக்கு முன்னால்)
2. பின்சடைக்காலம் (1950 முதல் 1965 வரை)
3. மாறு சடைக்காலம் ( 1965 முதல் 1975வரை)
4. முன்சடைக்காலம் ( 1975 முதல் 1985 வரை)
5. சுரிதார் காலம் ( 1985 முதல் 1995 வரை)
6. ஜீன்ஸ்காலம் (1995 ஆம் ஆண்டு தொடங்கி)

இந்தக் கால வரிசையைப் பார்க்கும் எவருக்குள்ளும் எள்ளல் தோன்றும் என்பதில் ஐயமில்லை. பெண்களின் இயக்கத்தினை, அரசியலை, விழிப்புணர்வை இதைவிடக் கொச்சைப்படுத்த முடியாது. இன்னும் அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் ஆணிய எழுத்து அகங்காரத்தின் விளைவுகள். அவற்றைத் தந்து அவற்றில் உள்ள ஆணியச் சொல்லாடல்களை விளக்க வேண்டியது இக்கட்டுரையின் கடமை.
                                                      நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் 
                                                   முனைவர்.மு.பழனியப்பன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.