நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் கொடூர சம்பவம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடி, உணவுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சவால்களை எதிர்நோக்கும் இலங்கை மக்கள் மத்தியில் தற்போது புதிய அச்சங்களை தோற்றுவித்துள்ளது.
கொழும்பில் இன்று மாலை (06-06-2022) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு -15 அளுத்மாவத்தை, ரெட்பானவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே 23 வயதான இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டில் கடந்த 05 நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்வங்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான கவலைகள் இலங்கையிலும் அதிகரித்துள்ளன.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தையில் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கொழும்பிலுள்ள பொலிஸ் துணை தலைவரின் அலுவலகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
இதில் 30 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதேவேளை கடந்த 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அளுத்கம மொரகல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெருவளையை சேர்ந்த 42 வயதான ஒருவர் உயிரிழந்தார்.
அன்றைய தினமே பிற்பகல் வேளையில் பாணந்துறை பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியது.
இதன்போது பாணந்துறை வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய மரக்கறி விற்பனையாளர் கொல்லப்பட்டார்.
அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் கடந்த சனிக்கிழமை 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போதைப்பொருள் குற்றத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் அறிவித்திருந்தது.
05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தங்காலை – மொரகெடிய பகுதியில் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர்.
04 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரே இந்த கொலையை செய்திருந்ததாகவும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த பின்னணியில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும் இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில், அரச தரப்பு சாட்சியாளர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இதனால் காவல்துறை திணைக்களத்திலிருந்து சாட்சியாளர்கள் குறித்த விடயங்கள், கசியவிடப்படுகின்றவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் காவல்துறை திணைக்களம் மீது ஸ்ரீலங்கா காவல்துறை தலைமையகம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது அதிகரித்துவரும் ஆயுதப் பாவனை இலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை