கடலில் மூழ்கியது ஜம்போ உணவகம்!!

 


உலக புகழ்பெற்ற ஹொங்கொங் சுற்றுலாத்தலமாக விளங்கிய ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், தென் சீனக் கடலில் மூழ்கியதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராசெல் தீவுகளுக்கு அருகில் ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், ஞாயிற்றுக்கிழமை பாதகமான நிலைமைகளை எதிர்கொண்ட பிறகு மூழ்கியதாக அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ் ஒரு அறிக்கையில் அறிவித்தது.

படகு 1,000 மீட்டருக்கும் (3,280 அடி) அடியில் மூழ்கியதால் மீட்புப் பணி மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மேலும் விபரங்களை சேகரிக்கும் முயற்சி செய்கின்றோம். பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை’ என தெரிவித்துள்ளது.

ஹொங்கொங்கின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று சின்னங்களில் ஒன்றான ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், மூழ்கியதையடுத்து இதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பிரியாவிடை செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பயணத்திற்கு முன், மிதக்கும் உணவகத்தை ஆய்வு செய்யவும், கப்பலில் ஹோர்டிங்குகளை நிறுவவும் கடல் பொறியியலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால நிதிச் சிக்கல்களுக்குப் பிறகு, கொவிட்-19 தொற்றுநோயால் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவகம் மூடப்பட்டது.

ஆபரேட்டர் மெல்கோ இன்டர்நேஷனல் டெவலப்மென்ட், கடந்த மாதம் வணிகம் 2013ஆம் ஆண்டு முதல் லாபகரமாக இல்லை என்றும், ஒட்டுமொத்த இழப்புகள் 100 மில்லியன் ஹொங்கொங் டொலர்களை (12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) தாண்டிவிட்டதாகவும் கூறியது.

ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புக் கட்டணத்தில் மில்லியன் கணக்கில் செலவாகிறது. மேலும் ஒரு டசன் வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் எந்தக் கட்டணமும் இன்றி அதை எடுத்துக்கொள்வதற்கான அழைப்பை நிராகரித்தன என்றும் மெல்கோ மேலும் கூறியது.

1976ஆம் ஆண்டு மறைந்த கேசினோ அதிபர் ஸ்டான்லி ஹோவால் ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், திறக்கப்பட்டது. சீன ஏகாதிபத்திய அரண்மனை போல வடிவமைக்கப்பட்டு, ஒரு காலத்தில் பார்க்க வேண்டிய அடையாளமாக கருதப்பட்ட இந்த உணவகம், ராணி எலிசபெத் முதல் டாம் குரூஸ் வரை பார்வையாளர்களை ஈர்த்தது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.