மன்னார் வங்காலைப் படுகொலை நினைவு நாள்!


வங்காலைக் கிராமமானது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான வாழ்வாதாரமாக கடற்தொழிலே உள்ளது. இங்கு சுகந்தபுரி, தோமஸ்புரி, பஸ்திபுரி என சிறுகிராமங்கள் உள்ளன. 


மார்ட்டின் என்பவர் ஒரு தச்சுத் தொழிலாளியாவார். இவர் தோமஸ்புரியில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவதினமன்று நள்ளிரவில் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை துப்பாக்கிகளுடன் வீட்டினுள் புகுந்த சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் கணவரை அவர் தச்சுத் தொழிலுக்கு பயன்படுத்தும் உளியால் குத்திக் கொலை செய்து தூக்கிலிட்டனர். 


அதன் பின்னர் மனைவி மற்றும் 09 வயதான அவரின் பெண் குழந்தை ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின் வெட்டிக் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அத்துடன் 07 வயதான அவர்களின் ஆண் குழந்தையும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டது. 


இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகளவிலான இராணுவத்தினரின் சப்பாத்துத் தடயங்கள் காணப்பட்டுள்ளது. அத்துடன் இராணுவத்தினரின் சீருடையில் காணப்படும் நட்சத்திர badge ஒன்றும், ஆணுறைகள் சிலவும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. அத்துடன் சம்பவ நடைபெற்ற இரவு அப்பகுதியில் இராணுவத்தினரின் நடமாட்டம் வழமைக்குமாறாக அதிகமாக இருந்ததாகவும் அயலவர்கள் குறிப்பிட்டனர்.


இக்குடும்பமானது முன்னர் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பிக் கொள்வதற்காக புலம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். பின்னர் 2002இல் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து மீளவும் தங்களது ஊரில் மீளக்குடியேறியிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


இச்சம்பவத்தின் பின்னர் இராணுவத்தினரால் அச்சுறுத்தல்கள் மற்றும் உயிராபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்தால் அக்கிராம மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து வேறு இடங்களிற்குச் சென்றிருந்தனர்.


இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர் 

01. மூர்த்தி மார்ட்டின் - வயது 35

02. மார்ட்டின் மேரி மெடலின் - வயது 27

03. மார்ட்டின் ஆன் லுக்சியா - வயது 09

04. மார்ட்டின் ஆன் நிலக்சன் - வயது 07


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதிபதி பொலிஸாருக்கு பணித்திருந்த போதிலும், மேலதிக விசாரணைகள் நடைபெறவுமில்லை, குற்றவாளிகள் இனங்காணப்படவும் இல்லை


ஆவண வெளியீட்டுப்பிரிவு,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.