வேலைக்காரி - சிறுகதை


இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையின் கனத்தை விட, எதிர்பார்ப்பு சுமந்து, அந்தப் பெரிய ஹாலில்... கால்கள் கடுகடுக்க ஒரே நிலையாய் நிற்பதுதான் கனகாவிற்கு, அதிகம் அழுத்தமாயிருந்தது. வேலைகள், அனைத்தையும் முடித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.


சோபாவில் அமர்ந்திருந்த, சுந்தரியம்மாவுக்கு, தனது வீட்டில் வேலை செய்யும் இவள், எதற்கு இப்படி வந்து நிற்கிறாள், என்பது தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் சின்னத்திரையில், நாடகம் பார்ப்பதிலே கவனமாயிருந்தாரோ, என்னவோ...?

“அம்மா...” ஏழ்மையின் கெஞ்சலாய் அழைத்தபோது, விளம்பரம் வர.

“எதுக்கு வந்திருக்கன்னு தெரியும்...டீ, தலகீழா இங்க நீ நின்னாலும் சரி, பணம் மட்டும் தரவே மாட்டேன்... உன்கிட்ட நாணயமில்ல...டீ” முதலாளியம்மா கறாராகக் கூறியது, கனகா காதில் கேட்காது போல்,

“இவ,அப்பனுக்கு ரொம்ப முடியலமா,பெரியாஸ்பத்திரில காட்டி சீக்கு தீரல, வெளி டாக்டர்ட கூட்டிப்போகணும்... அதாம்மா வந்தன். இந்த ஒருவாட்டி மனசு வைங்கம்மா...” எப்படியாவது தேவையைப் பெற்று விட வேண்டுமென்று கெஞ்சலை சற்று கூட்டினாள்.

“துணிய தேய்க தேய்க வரும் பணத்த கொண்டுபோய் முட்ட குடிச்சா, நோயில தான் சீரழியணும். அவனக் கெடுத்து வச்சதே நீதான டீ... இங்க கிடைக்கிற கூலியும், கொண்டு போகும் சாப்பாடும் குடும்பம் தள்ளப் போதும்னு, அவனோட வருமானத்த கண்டிச்சுக் கேட்காமலயே இருந்துட்ட, அவனும்... “இன்னும் சொல்லிருப்பாள்... மீண்டும் தொடரும் சீரியலில் மூழ்க வேண்டிதானது”

முகம், வெதும்பி, அடுத்த, விளம்பரத் தருணம் பார்த்திருந்தாள் கனகா.

“ஒரு ஆயிர ரூபா... தானமா...” கனகா இழுக்க, அந்தத் தொடர் முடிய, அடுத்த நாடகத்தைப் பார்க்காத காரணத்தில் டி.வி, ஒலியைக் குறைத்து,

“ஓ... ஆயிரம் ரூபாய் உனக்கு அவ்வளவு லேசாப் போச்சா...? இதோ பாரு...டீ பணத்தோட மதிப்பு ரொம்ப பெருசு. ஏற்கனவே நாத்தனா செய்முறைன்னு ரெண்டாயிரம் வாங்கின, மாசாமாசம் சம்பளத்துல கழிக்கறதா சொன்ன, இந்த எட்டு மாசத்துல நானூறுதான் வந்திருக்கு அதிலேயும் புள்ள சீக்கு... அப்படிணு நூத்தம்பது ரூபாயத் திருப்பி வாங்கிட்ட, வாங்கல் கொடுக்கல்ல நீ நாணயமா இருந்திருந்தா... இப்ப நான் ஏன்டீ இவ்வளவு பேசப்போறேன்? நின்னதெல்லாம் போதும்... ‘ம்' கிளம்பு. அப்படியே... போர்டிக்கோல வச்சுருக்க கட்டப்பையை எடுத்துட்டுப் போ... அய்யா, வேஷ்டி சட்டை செட்டா வச்சுருக்காரு... தும்மப் ‘பூ' வெள்ளையாத் துவைத்து...தேச்சு, கொண்டா டீ. அய்யா, மதுரை மீட்டிங் போறார், தெரியும்ல...? ஓ புருசன் கிட்ட விபரத்தைச் சொல்லி சுருக்கா ரெடி பண்ணச்சொல்லு”

கடுகளவும் குறையாத கறாருடன் மறுபடியும் முதலாளியம்மாள்... ரிமோட்டை எடுத்துக் கொள்ள, பெருமூச்சு விட்டு, ஊமை போல்... கிளம்பினாள் கனகா.

‘ம்...அம்மாவுக சொல்றதெல்லாம் சரிதான். பொறுப்பத்த புருசந்தான்... என்ன செய்ய... வந்த நோயப் போக்கணுமே... பணத்தேவையை யார்ட்ட கேக்றது? அந்த மனுசன் போக்குல விட்டா,வார வட்டிக்காரங்கக்கிட்ட பல்ல காட்டுமே... அய்யோ... சாமி, அது கூடவே கூடாது,'மனசு பதற முணுமுணுத்தவாறே... அழுகும் குழந்தையோடு, ஏமாற்றத்தையும், அழுக்குத்துணியிருக்கும் கட்டப் பையையும் தூக்கி வந்த மனைவியை, தேய்த்தபடியே ஏறிட்ட, மாரி... பணம், கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டபோது, தன் புத்தியில் கொஞ்சம் ‘சுளீர்' பட்டான்.

புலம்பி, விசும்பி அழுது கனகா, எவ்வளவோ சொன்னாள். அப்போது எல்லாம், நாக்கை மடக்கி, அரற்றி, தனது ஆண்தனத்தைக் காட்டியதை எண்ணிப்பார்த்து, இப்போது, வெக்கப்பட, வருத்தபடவே... முடிந்தது.

இரண்டு நாட்கள்... வீட்டு வேலைக்கு கனகா வரவில்லை.

காரில் சாப்பிங் சென்று, வந்த போது கவனித்ததில்...தேய்ப்பு வண்டியும் போடவில்லை மாரி.

‘ஒரு வேளை, வைத்தியத்திற்காகப் போயிருப்பாங்களோ... துணிகளை ரெடி பண்ணிட்டானா... என்னண்ணு தெரியலையே..? சென்டிமெண்டா அந்த வேஷ்டி சட்டைக இல்லனா அவருக்கு வேற கோபம் வருமே...'

சுந்தரியம்மாள், குழப்பத்திலிருக்கையில், ‘அம்மா...' என்றவாறே வீட்டுக்குள் வந்த, கனகா, “அந்தாளுக்கு முடியலம்மா... ரொம்பவும் எளப்பாயிருச்சு அதான், உடனே ஆஸ்ப்பத்ரிக்குக் கூட்டிட்டு போக வேண்டியதாப் போச்சுமா... லீவு சொல்லக் கூட அவகாசமில்ல மன்னிச்சுருங்கமா... அய்யா நாளைக்குத்தானம்மா மதுரை மீட்டிங் போறாரு. துணியக் கொண்டு வந்துட்டேம்மா” வழக்கமாக வைக்கும் டேபிளில் வைத்தாள்.

பணம் கேட்டாளே... அதற்கு என்ன செய்திருப்பாள்..? சுந்தரியம்மாள், அதுபற்றியே எண்ணிக் கொண்டிருக்கையில்.

“அய்யாவோட சட்டப்பைல இந்த ரூபா இருந்ததுமா” முந்தியில் முடிந்திருந்த பணத்தை எடுத்து கனகா நீட்டினாள்!

இரண்டு ஐநூறு ரூபாய்.. .நூறு ரூபாய் தாள்ஒன்று. கனகாவின் அந்த எதார்த்தத்தில், சட்டென புருவங்கள் அகண்டுவிட, சுந்தரியம்மாளுக்கு தன்னியக்கம் மொத்தமும் நின்றார் போலொரு உணர்வு.

“இந்தாங்கமா...” கனகாதான்.

‘வைத்தியச் செலவு பணத்துக்கு என்ன செஞ்ச...?' கேட்ட நினைத்தாள், வார்த்தைகள் தொண்டையைவிட்டு வெளியாகவில்லை.

ஒரு ஆயிரம் ரூபாய்க்கு வந்து, நின்றாளே... அப்படியொரு கஸ்டமான நெருக்கடித் தேவையிலும், இந்தப் பணம்... இவளுக்கு, ஒரு பொருட்டாகவேப் படவில்லையோ..!

பத்திரப்படுத்தி வைத்துத் தரவேண்டியதன் நோக்கம்...?

தனக்கானது இல்லை என்றதைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஏழ்மைத் தர்மத்தை கனகா நிலைநாட்டுகிறாளா..? தனதான நேர்மை... எந்த நிலையிலும் சோரமாகாதுன்னு உறுதியாக வைத்திருக்கிறாளே!

இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற, நமது வீட்டில் வேலை பார்க்கும், கனகாவிடமா... அவ்வளவு பெரிய கறார் காட்டினேன்... ‘ச்சே..சே,' நிறைந்த வசதிகள் இருந்தும், மனசிலும், எண்ணத்திலும் அவளே... நேர்மை நிரம்பியுள்ளவள்'

நீரில் மிதக்கும் தக்கையாய்... லேசாகிப் போனாள், சுந்தரியம்மாள்!

“அந்தப் பணத்த நீயே வச்சுக்க கனகா”

முதலாளியம்மாவின் அந்த, ‘டீ...' அதிகாரமற்று, இணக்கம் தெரியவும். ‘அட, நம்ம அம்மாவா..?' ஆச்சரியப்பட்டாள் கனகா.

ஆனாலும், பணத்தைத் திருப்பித் தருவதிலேயே அவள், அவளாகவே இருக்க, அறைக்குச் சென்று முதலாளியம்மாவோ, இரு ஐநூறு ரூபாய் தாள்களைக் கொண்டு வந்து நீட்டி, “இந்த பணத்தையும் வாங்கிக்க, கனகா,” என்றாள்.

“வேண்டாம்மா கடன் சொமய கூட்டக்கூடாதுல்ல...”

“இது, கடன் கிடையாது வாங்கிக்க... திருப்பித் தர வேணாம்”

“இல்லமா, தேவைக்குக் கேட்டா கொடுங்க”

“அப்பவும் தர்றேன். இந்தப் பணத்தக் கொண்டுபோய் ஆஸ்பத்திரிக்கு வாங்கின கடனை அடைச்சிரு” கனகாவோட மனசுக்கு, நேர்மைக்கு எப்படியாவது இந்த பணஉதவியை செய்தே ஆகவேண்டுமென்ற முனைப்பில், சுந்தரியம்மாள்.

“வார வட்டிக்குத்தான் வாங்கிருக்குமா... கடன் இருந்தாத்தான் அந்த மனுஷன் அக்கறையா வேலையப் பார்த்து ஒழுக்கமா காச ஏங்கைய்ல தரும்மா. இல்லனா பழயபடியே குடி குடினு புத்திகெட்டு அலையும். அதுவுமில்லாம... அய்யா அறியாம வந்த இந்தப் பணத்த நா திருப்பித் தாரதுதாம்மா செய்ற தொழிலுக்கு மரியாதை...” தனது நிலைபாட்டில் இம்மியளவு கூட விலகாது இருந்தும்.

''ரெண்டு நாளாச்சுல வேலைக நெறய அப்படியப்படியே கெடக்கும்மா நான், அடுப்படிக்குப் போறன். பணத்த அய்யா துணியோட வக்கிறேன்” என்றதும், தேய்ப்புத் துணி இடுக்கில் பணத்தைச் சொருகி வைத்ததும், கடமையே கண்ணாக, நேர்மையின் மொத்த உருவமாக நகர்ந்து செல்லும் கனகாவையேப் பார்த்துக் கொண்டிருந்த, சுந்தரியம்மாள்... பணத்தை விடவும் நேர்மையேப் பெரிதென்ற புரிதலில், ஏழ்மையாக இருப்பதாலும், வீட்டில் வேலை செய்து... கூலிக்கும், மிச்சமான சாப்பாட்டுக்கும் எதிர்பார்ப்பு மனுஷியாக கனகா இருந்தாலும், அவளும்... தரமானவளே... என்று உயர்வாக எண்ணிக்கொண்டாள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.