காந்திய வழி எனச்சொல்லி திலிபனின் தியாகத்தை மலினப்படுத்தாதீர்கள்.!

 


திலிபன் அண்ணாவை காந்தியுடன் ஒப்பிடுதலில் நான் முழுவதுமாக முரண்படுவதுண்டு. காந்தியவழியில் திலிபன் போராடினான் என எழுதுவதே பெருந்தவறு. இதற்குப் பாரிய ஆய்வெதுவும் தேவையில்லை, சாதாரண சிந்தனை இருந்தாலே போதும். 


காந்தி ஒருபோதும் ஆயுதமேந்திப் போராடத்துணிந்தவரல்ல. அவர் அவ்வழியில் பயணிக்க நினைத்தவருமல்ல. ஆனால் திலிபன் அப்படியல்ல. போராட இணையும்போதே ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொண்டே , அதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டே போராடத்துணிந்தவர். அவ்வாறான மனநிலையில் போராடச்சென்ற ஒருவர், ஆயுதத்தைக் கைவிட்டுவிட்டு அமைதிவழியில் போராடத்தலைப்பட்டது மிகமிக அரிதான நிகழ்வு. உலகில் இவ்வாறான வேறுநிகழ்வை நான் அறிந்ததில்லை. (ஆயுதத்தைக் கைவிட்டு அமைதிவழிக்குத் திரும்பி, உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த நிகழ்வு) 


இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, தமது  ஆயுதங்களை தவிபு ஒப்படைத்த தருணத்தில் அந்நிகழ்விற்குத் தலைமைதாங்க தலைவரால் நியமிக்கப்பட்ட திரு. யோகி அவர்களே மிகுந்த சினத்துடன்தான் அந்நிகழ்வில் கலந்துகொண்டார். முறைப்படி இராணுவத்தளபதி  ஆட்டிகலவிடம் ஓர் கைத்துப்பாக்கியை யோகி அவார்கள் கையளித்தபின் ஏனையோர் ஆயுதங்களைக் கையளிப்பதாகவே நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஆனால் யோகி அவர்கள் அந்தக் கைத்துப்பாக்கியை ஆட்டிகலவின் கையில் கொடுக்கவில்லை. வெறுமனே மேசையில் வைத்துவிட்டுத் திரும்பிவிட்டார். 


இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த புலிகளின் அமைதிமுகமாகவே திலிபனும் ஆயுதமின்றிய தனது "உண்ணாப்"போரை ஆரம்பித்தார். ஆயுதங்களில் நம்பிக்கை வைத்தவன் அமைதிவழிக்குத் திரும்பான் என்ற எண்ணப்பாட்டை உடைத்தெறிந்த புலிகளின் முகமாக திலிபன் அண்ணா உண்ணாதிருந்து உயிர்துறந்தான்.


திலிபன் அண்ணா நினைத்திருந்தால், "இந்த வழி சரிவராது"  என இடையிலேயே உண்ணாநோன்பை முறித்துக்கொண்டு ஆயுதவழிக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் எந்த இலட்சியத்தை இறுகப்பற்றினோமோ, அந்த இலட்சியத்துடனே  அதே வழியிலேயே உயிரிழப்பேன் என்ற அந்த ஓர்மமே திலிபன் அண்ணாவின் சிறப்பு. தன்னை இந்தியா சாகடிக்கும் என்பது தெரியாதவரல்ல திலிபன் அண்ணா. காந்தியைப் போன்ற அமைதிப்போராட்டக்காரர்களை மதித்த இந்தியா தனது உண்ணாநோன்பினை மதிக்காவிட்டாலும், தனது சாவின் பின்னராவது தமது மக்களைப் பாதுகாக்கும் என அவர் எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் இந்தியா காந்தியையும் மதிக்கவில்லை, எமது மக்களைப் பாதுகாக்கவுமில்லை. 


தனது மக்களுக்காக எந்த வழியிலும் போராட அணியமானவன் திலிபன். காந்தி ஒரே வழியைத்தவிர வேறெதுவும் அறியாதவரென்பதற்கு அப்பால், தமது இனத்தினாலேயே கொல்லப்பட்டவர். காந்தியின் சித்தாந்தம் அவரது இனத்திற்கே தெளிவாகப் புரிந்திருக்கவில்லை. திலிபன் வேறு, காந்தி வேறு. இருவரது நிலைப்பாடும்வெவ்வேறு. இருவரும் தமது இனத்திற்காக உயிர்கொடுத்ததும் வழியும் வெவ்வேறானவை. 


வேட்டையாடத் தெரிந்தும் பசிகிடந்த புலிதான் திலிபன். அமைதி வழியில் நடந்தும் சொந்த இனத்தால் படுகொலை செய்யப்பட்ட சாதாரண மனிதர் காந்தி.


ஆதலால் காந்திய வழி எனச்சொல்லி திலிபனின் தியாகத்தை மலினப்படுத்தாதீர்கள்.


-தேவன் 


#learnthestruggle Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.