ஐ.நாவின் எச்சரிக்கை!!

 


இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கும் தீர்வை வழங்குவதற்குமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், அதனை அரசாங்கத்தின் நிறைவேற்றுத்தீர்மானங்கள் மூலம் அடக்கப்படுவதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமது சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கிளெமென்ட் நியாலெற்சொஸி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மீறல்

இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில், சில ஒன்றுகூடல்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் மற்றும் அவர்களது அதிருப்தி என்னவென்பதை அறிந்துகொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நிறைவேற்றுத்தீர்மானத்தின் ஊடாக அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்படுகின்றன.

 

அதுமாத்திரமன்றி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான விடையாக பொலிஸார் பிரசன்னமாவதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மீறும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.


போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கான பொறுப்புக்கூறல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவமான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், சிறந்த வேலைச்சூழல் மற்றும் கல்விக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக்கோரி அமைதியான முறையில் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


 பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

அமைதி வழியிலான ஒன்றுகூடல்கள் தொடர்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சட்டரீதியான தேவைப்பாடு சார்ந்த கொள்கைகள் மற்றும் அவசியத்தன்மை என்பவற்றுக்கு ஏற்புடையதாக அமைவது அவசியம் என்பதுடன், அவை வெறுமனே மேம்போக்காகப் பிரயோகிக்கப்படக்கூடாது.


ஆகவே இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பில் தெளிவானதும், சட்டத்திற்கு அமைவானதுமான வழிகாட்டல்களைத் தயாரிக்கவேண்டியது அவசியமாகும்.


அத்துடன், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது சட்ட உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.