முழுவதுமாக முடங்கிபோயுள்ள இலங்கை நாடாளுமன்றம்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் உணவு மற்றும் எரிபொருட்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மேலும், அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய், பெற்றோல், டீசல், உரம் போன்றவற்றை இறக்குமதி செய்யமுடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
பெற்றோல், டீசல் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிபோய் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
தற்போது இலங்கை நாடாளுமன்றமும் முடங்கி போய் உள்ளது. தேவை இல்லாமல் பெற்றோல் செலவாவதை தடுக்க நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகளில் பெற்றோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். ஆனாலும் எரிபொருள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இன்றும் நாளையும் பங்குகளுக்கு குறிப்பிட்ட அளவு பெட்ரோல் வினியோகம் செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் டீசல் வாங்குவதற்காக இலங்கையில் உள்ள ஒரு பங்கில் 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தலைமையிலான 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இலங்கை சென்றனர்.
அவர்கள் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபசஅ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, கடன் உதவி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர்.
அப்போது இந்திய அதிகாரிகள் இந்தியாவின் நட்பு நாடாக திகழும் இலங்கை பொருளாதார பாதிப்பில் இருந்து மீளுவதற்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.
கருத்துகள் இல்லை