மரித்த தாயிடம் மார் சூப்பிய குழந்தையின் சாபமா? - கோபிகை



உரிமைத்தீ 

உயிர்கொண்டு எழுந்தது

அரக்கம் அழித்திட

இலங்கை திரண்டது...


இனவாதச் சிரசை

இனிமேலும் வைத்தால்

இலங்கையின் இருப்பு

இருக்காது புரிந்தது. 


ஆணவத்தின் வேதாந்தம்

அடியோடு அழிந்திட

அந்தோ புறப்பட்டது

அறச்சேனை இங்கு.


வேகித்தணிந்த உயிர்கள்

விட்ட சாபம் மட்டுமா....

மரித்த தாயிடம் 

மார் சூப்பிய குழந்தையின் சாபமும்தான்..


குறுநிலப்பரப்பிற்குள்

குவியவைத்து

கொத்துக் குண்டுகளால்

கொன்று குவித்தபோதின் கெக்கலிப்பு  - அன்று


இலங்கையின் 

ஏகோபித்த தலைவர்கள்

இருப்பிடம் துறந்து 

ஒளித்து அலையும் அவலம் - இன்று.


சத்தியம் சாகாதென்பதும் 

இயற்கை திரும்பும் என்பதும்

இன்று கண்டோம் ...

இது விந்தையல்ல..வரலாறு.


இனவாத ஆடை தரித்து 

மதவாத மணிமுடி சூட்டி

ஆட்சிக்கதிரை அமர்ந்தால்

அந்தோ, முடிவு பரிதாபம்...


யூலை 9

மறக்கமுடியாத திருநாள்.

மமதை உடைந்து சிதறிய 

மகத்தான பெருநாள்.


அரசியல் சாணக்கியத்தில்

அடி நுனி கண்டோம் என்றார், அட

காலம் கணக்கெழுதி

கர்வம் உடைத்ததே....


அரியணைக் கால்கள்

உடைந்து கிடக்கிறது..

அப்பத்தா அமர்ந்திருக்க

அழகாய் சிரிக்கிறது. 


முள்ளிவாய்காலின் 

குருதிச் சத்தம்

அறுத்துப் போட்டதோ

கொழும்பின் நரம்புகளை...


துட்டகைமுனு என்றும்

இரட்சகர் என்றும்

சொல்லிக் கொண்டவர்

சொந்த இனத்தால் விரட்டியடிக்கப்பட்டார்.


அரசியல் கதிரைகளுக்கு

இது சாட்டையடி..

வேங்கை வடிவிலே

வரும் இனி நெருக்கடி.


ஆட்சிக்கதிரைகள் 

அறம் நிறைந்தவை

அழித்தலுக்கு ஒரு போதும்

அவை துணை போவதேயில்லை..


மக்கள் புரட்சி வெடித்தது

மாபெரும் அநீதி  தெறித்தது.

மனித நேயம்  ஒன்றாகி

அடி வருடிகளை அடித்துப்போட்டது.


இனியேனும் மலரட்டும்

இனிதான ஒரு தேசம்.

இனங்களும் மதங்களும்

இணையாமல் போனால்

ஒரு போதும் விடியாது இலங்கை. 


வரலாறு எழுதும்

புது விடியலை நாளை.

சேர்ந்த கைகள்

சிறக்கும் ..இது..உறுதி...


யூலையின் சோகம்

தந்தது போரை...

யூலையின் கோஷம்

வென்றது  இனவாதத்தை...


ஆடிய சன்னதம்

அடங்கிப் போனது..

இனியொரு தேசம் எழுந்து

சிறக்கட்டும்......


கோபிகை.















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.