இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!




இந்தியாவில் திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பம் தரித்துள்ளார்.


இதையடுத்து, அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடிய நிலையில், திருமணமாகாதவர் என்ற காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


இதனையடுத்து குறித்த பெண் புதுடில்லி மேல் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு அவரது கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் குழாம், ஒரு பெண் திருமணமாகாதவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு கருக்கலைப்பு உரிமையை மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.


இப்போது அந்தப் பெண்ணின் கரு 24 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி மருத்துவமனை மருத்துவக் குழு மனுதாரரை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கருக்கலைப்பால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்பது உறுதியானால் கருக்கலைப்பு செய்யலாம் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.


அவ்வாறு அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய இயலாத மருத்துவ நெருக்கடி ஏற்படின், மகப்பேற்றுக்காக அவரை தகுந்த பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


அந்தப் பெண் குழந்தையைப் பிரசவித்து, அதனை வழங்கிவிட்டு செல்லலாம் என்றும், குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


குழந்தை அவசியமானோர் முறைப்படி அங்கு தத்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.