கூட்டமைப்பின் ஆதரவு குறித்து முகநூல் வாசியொருவரின் கருத்து!!

 


டலஸ் அழகப்பெரும எனும் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்தமை கூட்டமைப்பு செய்யும் அரசியல் தற்கொலை... நரியை விரட்ட ஓநாயை ஆதரிப்பதன் பெயர் ராஜதந்திரம் இல்லை... ராஜபக்சேக்களின் ஆதரவு பெற்ற ரணிலை அகற்ற ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்தவரும் ராஜபக்சேக்களின் கைத்தடியாக செயற்படுபவருமான டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கிறோம் என்பது கேலிக்கூத்தானது என முகநுால் ஆர்வலர் சுப்பிரமணியப் பிரபா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய உணர்வின் அடிப்படையில் செயற்படவேண்டியது முதற்கடமையாகும். மாபெரும் இனவாதிகளின் கூட்டணிக்கு வலிந்து சென்று பகிரங்கமாக ஆதரவளிப்பது நாளை அவர்கள் மேற்கொள்ளும் தமிழர் விரோத செயல்களுக்கு ஒப்புதழ் அளிப்பதற்கு ஒப்பானது.

அரசியல் பதவிக்காக ஒன்று சேர்ந்திருக்கும் டலஸ்+சஜித் அணிகள் தங்கள் பதவிகளை தக்கவைக்க வழமைபோன்று இனவாதத்தையே கையிலெடுக்கும். சரத்வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற தமிழின துவேசிகளோடு ஒன்றினைந்து தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தரப்போகிறோம் அதற்காகவே ஆதரித்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுமாயின் அது மிகப்பெரும் நகைச்சுவையாகும்.

தமிழர்களின் உணர்வுகளின் மீது கட்டமைக்கப்பட்ட கட்சி அந்த உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்காது தென்னிலங்கையின் அதிகாரப்போட்டியில் ஈடுபட்டிருக்கும் அடிப்படைவாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ராஜபக்சேக்களை அகற்ற எந்தப்பேயுடனும் கூட்டுச்சேர தயாராக இருப்பது ஏற்புடையது கடந்த காலத்தில் நாம் அதை செய்திருக்கிறோம்.

ஆனால் இன்று மகிந்த ராஜபக்சாக்களை உருவாக்கிய அவர்களை பலமூட்டிய அவர்களுக்காய் இனவாத வாக்குகளை சேகரித்த அவர்களின் பக்கபலமாக இருக்கும் அவர்களின் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு ஆதரவளிப்பது ராஜபக்சேக்களை அகற்றும் செயற்பாடு இல்லை அவர்களை மீளவும் எதிர்ப்பின்றி மக்கள் மத்தியில் நடமாட வைக்கும் செயற்பாடே.

இதுவே ரணிலுக்கோ அல்லது அனுரவுக்கோ கூட்டமைப்பும் எதிரணிகளும் ஆதரவளித்து அதில் ஒருவரை வெற்றிபெற வைத்தால் அது ராஜபக்சே யுகத்திற்கு முடிவுரை எழுதும் செயற்பாடாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது பொதுஜன பெரமுனவை சேர்ந்த கோத்தபாயவுக்கு பதிலாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடு.

பொதுஜன பெரமுன மக்களின் ஆதரவை இழந்திருக்கிறது. அந்தக்கட்சி சார்பாக எவரும் இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடாது அது ஜனநாயக விரோதம் என பாடமெடுத்த கூட்டமைப்பு இன்று தானே அந்தக்கட்சியை சேர்ந்தவருக்கு ஆதரவளித்து பொதுஜன பெரமுனவின் மீள் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களின் ஆணையினை தென்னிலங்கை அடிப்படைவாத கட்சியொன்றின் மீள் எழுச்சிக்கு கூட்டமைப்பு பயன்படுத்தியமை வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகும். மக்கள் தம் விருப்பில் வாக்களிப்பதற்கும் மக்கள் பிரதிநிதிகள் தம் இஸ்டப்படி வாக்களிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

தென்னிலங்கையின் அதிகாரப்போட்டியில் பங்குபற்றி அதனூடாக ஆட்சியில் அங்கம் பெற ஏனைய சிறுபான்மை கட்சிகள் முடிவெடுத்திருக்கலாம் அவர்கள் காலம் காலமாக ஏதோவோர் தரப்போடு இணங்கிச்செயற்பட்டவர்கள்.

அதே முடிவை கூட்டமைப்பு எடுத்தமை அவர்களின் அபிலாசைகளும் கூட்டமைப்பின் அபிலாசைகளும் ஒன்றே என்ற முடிவுக்கு வரவேண்டிய சூழலை தோற்றுவித்திருக்கிறது. தென்னிலங்கை கட்சிகள் பதவிகளை பங்குபோட ஒன்றுடன் ஒன்று அடிபடும் போது இடையில் புகுந்து நாம் எம்முடைய தனித்துவத்தை அடகு வைத்திருக்கிறோம்.

இரண்டுபேருமே திருடர்கள் எனும் போது ஏதாவது ஒர் திருடனுக்கு ஆதரவளிப்பதென்பது அந்த திருட்டுக்கு எம்மையும் பங்காளிகளாக்கிக்கொள்வதேயன்றி வேறில்லை.

19 ஆம் திருத்தத்தை அகற்றி நாட்டின் குறைந்த பட்ச ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த 20 ஆம் திருத்ததை ஆதரித்த அதை நிறைவேற்றிய அடிப்படைவாதிகள் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீள உறுதிப்படுத்துவோம் என்று கூறும் கதைகளை கூட்டமைப்பு நம்பும் அளவுக்கு இருக்கிறதெனில் அக்கட்சி தொடர்பான ஆதரவு நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டியேயுள்ளது.

பேஸ்புக்கில் எழுதும், கருத்துக்களை பகிரும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காய் கூட்டமைப்பு தன்னுடைய முடிவுகளை மாற்றவேண்டியதில்லையென கூட்டமைப்பின் இந்த முடிவை ஆதரிக்கும் ஆதரவாளர்கள் பெரும் பிரச்சாரம் செய்கின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.