நரியும் ஒருநாள் சிங்கமாகும்!!புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவானார்!

அவர் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோற்று தேசியப் பட்டியல் மூலம் உள்ளே வந்து பிரதமராகி, இடைக்கால ஜனாதிபதியாகி,  இன்று பாராளுமன்ற வாக்கெடுப்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாகி விட்டமை சிறந்த அரசியல் சாணக்கிய உதாரணங்களில் ஒன்றாக  வரலாற்றில் பதியப்படும்! நிற்க!


சரி அவரால் எங்களுக்கு ஏதும் பிரியோசனம் வருமா? இந்த அரசியல் சாணக்கிய நகர்வில் விடப்பட்ட தவறுகள் என்ன? ரணிலின் எதிர்கால அரசியல் நகர்வு எப்படி அமையலாம் என்பது தொடர்பில் என் தனிப்பட்ட பார்வையை எழுதுகிறேன்!


1. பொதுவாக ஆளுமை என்பது மூன்று முக்கிய குணங்களை கொண்டிருக்க வேண்டியது!

1. Knowledge- அறிவு

2. Skills- அறிவை பயன்படுத்தும் திறன்

3. Passion- ஆத்மார்த்தமான உழைப்பு


ரணில் ஏனைய பல அரசியல்வாதிகள் போல் இல்லாமல்  அரசியல்/ பொருளாதாரம் சார்ந்த அறிவுள்ளவர்(Knowledge) . அத்துடன் வெறுமனே knowledgeஐ மட்டுமே கொண்டிராது அதை பயன்படுத்தக்கூடிய skill உம் உள்ளவர். 

ஆனால்  passion  என்பதில் தான் பிரச்சினை! ஜனாதிபதி பதவி ஆசை என்பதே அவரது passion ஆக இருந்ததால், knowledge + skill இரண்டையும் அவரது சொந்த பதவி ஆசையை நிறைவேற்ற மட்டுமே இவ்வளவு நாளும் பயன்படுத்தி வந்தார்.

அதுவே அவரை படுகுழியில் தள்ளி எல்லாவற்றையும் இழக்கவைத்தது! ஆனால் ரணில் இழப்பதற்கு வேறோன்றும் இல்லாத ஒரே ஒருவராக தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றம்  வந்தார்.


2. ரணில் என்பவரின் அடிப்படையும் இந்த இடத்தில் மீட்ட வேண்டும். ஒரு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மிகப்பெரிய ஆழுமையாக தெற்கில் அறியப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் அரசியல் வாரிசு போன்ற சாயலுடன் ஜே. ஆர் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

ஆக ஐக்கிய தேசிய கட்சி என்பது அவரது உடலில் ரத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்ப்பே அதிகம்!

தவிர சஜித் பிரேமதாச அறிவிருந்தாலும் திறமை இல்லாதவர் என்பதை நன்கு உணர்ந்தும் இருந்தார். அதனால் தான் சஜித்தை நம்பி போபவர்கள் என்றோ ஒருநாள் அந்த தவறை உணர்வர் என்ற தெளிவும் இருந்திருக்கும்! இவ்வாறான காரணிகளால் தான்,

கடந்த தோல்விகளுக்கு பின்னர் நடந்த ஒரு நேர்காணலின் போதும் "நான் மீண்டும் வருவேன்! 2024 இல் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்பி முடிப்பேன்" என்ற தொனியில் உறுதி படக் கூறியிருந்தார்.


3. மேற்குறித்த 1 & 2 காரணிகளே மகிந்த குடும்பத்தில் ரணிலை நம்பியிருக்கும் இன்றைய நிலைக்கு  வழிவகுத்தது.

மகிந்த ஆட்சியில் களச்சூழல் கடினமாகும் என்பதை ரணில் 2015-2018 காப்பகுதியிலேயே நன்கு உணர்ந்திருந்தார். பொருளாதார அறிவுடைய அத்தனை பேரும் அறிந்திருந்தனர்! புரியாதவர்கள் எனது " முட்டாள்கள் தேர்ந்தெடுத்த அறிவாளிகள் 19.07.2022"  பதிவை பாருங்கள்!  தவிர மகிந்த குடும்ப சீன சார்ப்பு ஆபத்தில் முடியும் என்பதுவும் மேற்குலகு- இந்திய சார்பு ரணிலுக்கு நன்கு தெரியும்!  ஆக இந்த சந்தர்ப்பத்துக்காக இரண்டு வருட தவம் தேவைப்பட்டது! நரிக்கான நேரமும் வந்தது!


4. மகிந்த- கோத்தா குடும்பம் வேறு வழிஇன்றி இறுதி துருப்புச்சீட்டாக ரணிலை பிரதமராக்கியது! அதில் நிட்சயமாக இந்திய- மேற்குலக பங்கும் இருந்திருக்க கூடும்! ஆனால் கோத்தா ஜனாதிபதியாக உள்ளவரை எந்த MP ஆதரவும் இல்லாத தன்நிலை எப்போதும் பறிபோகலாம் என்பதால் SLPP இன் தோழனாகவும் மேற்குலகின் நகர்வுகளுக்கேற்ப காய் நகர்த்தினார்!

"அரகல" வை தொடர்ச்சியாக ஆதரிப்பது போலும்,  நாட்டின் நிலமை மோசமாவாதாகும் அடிக்கடி போக்கு காட்டி சமூக அழுத்தத்தை அதிகரித்து கோத்தாவை கோதாவை விட்டு ஓடவைத்தார்!

சிலநாட்களின் முன்னர்  நேரடியாக இடைக்கால ஜனாதிபதி!   நேற்று ஜனாதிபதி வேட்பாளர்!

இன்று சர்வ வல்லமை பெற்ற இலங்கை ஜனாதிபதியாகி விட்டார்!


5. இதில் அரசியல் கோமாளிகளாக சஜித்- டலஸ் கூட்டு அமைய மேற்குலகின்/ இந்திய விருப்புக்கு எதிராகவே கூட்டமைப்பு தானாக போயி சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.

இதற்கு கூட்டமைப்புக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு அரசியல்வாதிகள் கூட காரணமாக இருந்திருக்கலாம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஜீவன் தொண்டமான் அணி நேற்று ரணிலுக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவித்த போதே எனக்கு இந்த சந்தேகம் வலுத்திருந்தது. இன்று நடந்த சம்பவத்தை பார்க்கையில் கிட்டத்தட்ட உறுதி.

தெரிந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தேர்ந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகள்  அறியாமல் போனது மட்டுமல்லாமல், தமிழ் தேசிய கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணான பௌத்த சிங்கள பேரினவாதி ஒருவரே நேரடியாக ஆதரிக்க முனைந்தமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தற்கொலைகளில் ஒன்று! நிற்க.


6.  ரணில் இனி என்ன செய்யலாம் என்று பார்த்தால் என்னவும் செய்யலாம்!

 அடுத்து வரும் 2 வருடங்களுக்கு அவருக்கு SLPP MP க்களின் ஆதரவு தேவையும் இல்லை! உண்மையில் இனி ராஜபட்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய தேவையும் இல்லை.

சரியாக காய் நகர்த்தினால், சிலரையாவது கூண்டில் ஏற்றி  பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி ஐக்கிய தேசிய கட்சியை கட்டி எழுப்பும் வாய்ப்பும் உண்டு. ரணிலுக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை! அரசியல் வாரிசுகளும் இல்லை ஆகையால், நாட்டை மக்கள் விரும்பும் வகையில் கட்டி எழுப்பி நல்ல பெயருடன் போகும் வாய்ப்பும் உண்டு.

இங்கே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பாரா என்றால் நாங்கள் விரும்பும் தீர்வு கிடைப்பது குதிரைக்கொம்பே! இவ்வாறு நாட்டை நல்ல திசையில் இழுத்துச்செல்லவேண்டுமாயின் இன்னொரு விடையம் நடக்க வேண்டி உள்ளது.


7. சஜித் அணியில் இருக்கும் ஹர்ஷா, இரான் போன்றோரும் SLPP இல் இருக்கும் தம்மிக பெரேரா, நாலக, போன்றோரும் JVPஇல் இருக்கும் அனுர போன்றோரும் , சுமந்திரன் சாணக்கியன் போன்றோரும், ஹரின் மனுஷ போன்றோரும் ரணிலுடன் சாதுரியமாக இடைக்கால அமைச்சரவையில் இணைவது நடக்க வேண்டும். அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளை எடுக்க முன்வரவேண்டும். இது மிக முக்கியமானது ஏனெனில் அதுவே மகிந்த அணியின், சுதந்திரகட்சியின் அறிவற்ற அடிவருடி இனவாத அரசியல்வாதிகளும் , உதய கம்பின்மன, விமல் போன்றோரும் இடைக்கால அமைச்சரவையில் நுளைவதை தடுக்கும். அது ரணிலின் அரசியல் இயந்திரத்தை இலகுவாக்கும்!

SLPP ஏனைய MP க்கள் உள்ளிட்ட மகிந்த குடும்பம் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்! நாங்களே எதிர்பார்க்காமல் அதில் சிலர் கம்பி எண்ணவும் வைக்கப்படலாம்! தவிர இந்திய மேற்குலக ஆதரவுப்புலம் தொடரும்!

விரைவில் எண்ணைக்கப்பல்கள் வரும்!

இந்திய credit line வரும்!

IMF காசு குடுக்கும்!


8. இன்னொரு புறம் இது நடக்காமல்,  ஏனைய கட்சிகள் இணைய மறுத்து, அரகல போராட்டம் தொடருமாயின்,

மீளுவும் மகிந்த குடும்பத்திற்கு சார்பான அமைச்சரவை அமையும். மக்கள் போராட்டங்கள் உக்கிரமடையும்!

JVP தன் அரசியலுக்காக களநிலைகளை கடினமாக்கும். வன்முறைகள் கூட ஆங்காங்கே வெடிக்கலாம்!

நாளடைவில் மொத்த பழியும் ரணில் மேல் சுமத்தப்பட்டு ரணில் பதவி விலகுவார். மீண்டும் தேர்தல் வர மறுபடியும் மகிந்த அணி ஆதரிக்கும் வேறு ஒரு வீணாப்போனது ஜனாதிபதியாகும். அதற்குள் நாட்டில இருக்கிற சனத்துக்கு பாதி ஜீவன் போயிடும்! இப்படியே இரண்டாவது ரவுண்டு மூணாவது ரவுண்டு என அடுத்த தேர்தல் வரை விளையாடலாம்! பூனைக்கு விளையாட்டு எலிக்கு சீவன் போன கதையாக அப்பாவி மக்களே துன்பப்படுவர்!


ஆக அனைத்து மகிந்த எதிர்ப்பு அரசியல்வாதிகளை ( குறிப்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள்) கேட்பது இதுதான்.

ரணில் என்னும் நரியை உங்களைப்போல நானும் காதலிக்கவில்லை! ஆனால் நரி இன்று சிங்கமாக மாறியிருக்கிறது.

சிங்கமாக மாறிய நரி மீண்டும் நரியாக மடிவதை விரும்பாது சிங்கமாக மடிவதையே விரும்பும். அந்த சூழ்நிலையை சாதகமாக்கி இன்று நாடும் நாட்டு மக்களும் படும் அவஸ்த்தைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் தார்மீக கடமைகளில் இறங்கலாம். உங்கள் சொந்த தனிநபர் அரசியல் விருப்பு வெறுப்புகளை காட்டும் நேரம் இதுவல்ல!


இந்த அரசியல் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தினால் விரைவில் ஓரளவு மூச்சு விடலாம். இல்லையேல் இனிவரும் பல மாதங்கள் ரணமாகவே கழியும்! 

இது நான் விரும்பி ஏற்றதல்ல! எழுதுவதல்ல! இதுவே ஜதார்த்தம்!


நன்றி வணக்கம்!


திருநாவுக்கரசு தயந்தன்

20.07.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.