அகம் திருத்தின் புறம் ஒளிரும் - ஜெகன் மோகன்!!
இச்சூழல் உருவாக உனக்கும்
பங்கில்லையோ?
சூழ்நிலை சரியில்லையென
நீயும் பிதற்றலாமோ?
தேர்வுக்குமுன் பாடம் தருவது பள்ளிப்பழக்கமன்றோ?
தேர்வை முதலில் வைப்பது
இயற்கையின் வழக்கமன்றோ?
அனிலிலிட்ட மெழுகாய் நீ
உருகிடல் தகுமோ?
அன்பெனும் ஊற்று மன
வெப்பம் ஆற்றாதுவிடுமோ?
சுயசோதனைக்கான ஒரு
நேரம் இதுவன்றோ? எங்கே
சறுக்கினோமென்று முனைதல்
நல்வழி காட்டுமன்றோ?
தவறுகள் யாவும் உணர்ந்து
திருந்திடின் மீண்டும்
பொன்னான உலகிங்கு
வருதற்கொரு தடையோ?
நடந்துவந்த பாதையினை
செப்பனிடல் இழிவோ?
பொதுநல எண்ணமிங்கு
வளர்த்தல் தவறோ?
இதுவரை ஏந்திவந்த உன்
எங்கும் சுயம் எதிலும் சுயம்
இன்று சுவர்தாண்டிப்போனதொரு உண்மையன்றோ?
நிலைக்கண்ணாடியில் நின்று
முகம் திருத்தல்போல் நீயும்
மனக்கண்ணாடி நோக்கி
அகம் திருத்தல் நலமன்றோ?
நடந்தவைகள் நடந்தவைகளாக்கி
நடப்பதை நல்லவைகளாக்கின்
மீண்டும் புதுவாழ்வு இப்புவியில்
நிச்சயமன்றோ?
கருத்துகள் இல்லை