59 வயதான விதவைத் தாயாருக்கு மறுமணம் செய்துவைத்த மகள்!!
திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் தனக்கான ஒரு துணையை தேர்வு செய்து கொள்வது என்பது இந்த சமூகத்தில் அவ்வளவு எளிது கிடையாது.
என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்கள், இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள இந்த சமூகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை .
இந்தியாவின் கேரளாவில் விதவையான தனது தாயாருக்கு மகளொருவர் இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டதால், அவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாயாரின் தனிமையான வாழ்க்கையை அவதானித்த மகள் பிரசிதா, தாய்க்கு ஒரு துணை வேண்டும் என எண்ணி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து மணமகனை தேட ஆரம்பித்துள்ளார்.
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த திவாகரன்(63) என்பவர் மனைவியை இழந்து வாழ்ந்துவந்துள்ள நிலையில், அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க பிரசிதா முடிவு செய்துள்ளார்.
திவாகரன் இரண்டு மகள்களுக்கு தந்தை மட்டுமின்றி வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தாயாரின் நிலமை குறித்து அவரிடம் சென்று பேசிய பிரசிதா , அவரது இரண்டு பெண்களிடமும் பேசி இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இறுதியில் தாயாருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.
தாயின் திருமணம் குறித்து பேசிய பிரசிதா,
நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார்.
எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமணம்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை