தரைமட்டமான இரட்டைக் கோபுரங்கள்!இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ‘சுப்பர்டெக்” என்ற நிறுவனம்  அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்களை நிர்மாணித்துவந்தது.


சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பு தொகுதியில் ஒரு கோபுரத்தில் 32 தளங்களும் மற்றொரு கோபுரத்தில் 29 மாடிகளும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என முறைப்பாடு எழுந்தது.


இது தொடர்பான வழக்கு இந்திய உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.


அதன்படி இன்று மதியம் 2.30 க்கு இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.


குறித்த கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.


இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ட்ரோன்கள்' பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தகர்ப்பு வேளையில் ஒரு கடல் மைல் சுற்றளவு கொண்ட வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.


மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 560 காவல்துறையினர், 100 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டடத்தை தகர்ப்பதற்கு சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன.


இந்த கட்டடங்கள் வெடி வெடித்த சில வினாடிகளில் தரைமட்டமாகியன.


கட்டட இடிபாடுகளால் எழுந்த புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இரட்டை கோபுரத்தின் கட்டுமான சேதங்களை எடுத்துச் செல்ல 1200 டிப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிதைவுகளை அகற்ற சுமார் 3 மாதங்கள் ஆகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி இந்திய ரூபா எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வெடிபொருள் வைத்து தகர்த்து இது 9 நொடியில் தரைமட்டமானது.


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.