குமரித்தீவு - சிறுவர் கதை.

 


குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ பசுமை நிறைந்த  காடுகள் சூழ்ந்த அழகிய தீவு. அங்கே கங்காருக்கள் மிகவும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன. அந்தத் தீவைத்தழுவும் கடலில் பல டொல்பின் மீனினங்கள் வாழ்ந்து வந்தன. குமரித்தீவில் வாழும் கங்காருக்கள் தினமும் காலையும் மாலையும் கடற்கரைக்கு வந்து அதன் அழகை இரசிப்பது வழக்கம். கடற்கரையில் கூடும்கங்காருக்கள் டொல்பின்களை தமது நண்பர்களாக்கிக் கொண்டன.


                 ஒவ்வொரு நாளும் கடலை இரசிக்க வரும் கங்காருக்கள் காட்டிலிருந்து பறித்து வரும் பழங்களையும் கிழங்குகளையும் டொல்பின்களுக்கு பரிசாகக் கொடுத்தன. டொல்பின்கள் பதிலுக்கு கங்காருக்களை தமது முதுகிலேற்றி கடலைச்சுற்றி மகிழ்வித்தன. இவ்வாறு ஒருவருக்கொருவர் மாறிமாறி உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களின் அமைதியான வாழ்வைக்குலைத்து அதிகாலையில் கடலில் ஏதோ பெரிய சத்தம் கேட்து. தீவின் நடுப்பகுதியில் இருந்த கங்காருக்கள் திகைத்தன. 


“ என்னவாக இருக்குமென” யோசித்தன. 


“ கடலில் ஏதோ பிரச்சினையோ” என்றது ஒரு கங்காரு. 


"கடலில் எங்கள் நண்பர்கள் வாழ்கிறார்களே, அவர்களுக்கு ஏதாவது ஆபத்தோ?"  என்றது இன்னொரு கங்காரு. 

'வாருங்கள் போய்ப் பார்க்கலாம் " என்றது தலைமைக்கங்காரு.


விடயம் தெரியாத எல்லாக் கங்காருக்களும் கடலை நோக்கிப்படை எடுத்தன. அந்தோ பரிதாபம்..! பாதிவழி செல்லமுன் கடலலை மேலெழுந்து தம்மை நோக்கி வருவதைக்கண்டு திகைத்தன. திரும்பி ஓடுமுன் அலை அவர்களை இழுத்துச் சென்றது. இதைக்கடலில் இருந்து பார்த்த டொல்பின்கள் அவசரஅவசரமாக கங்காருக்களின் அருகில் வந்து அவர்களை முதுகில் ஏற்றிக் கொண்டு மிகவிரைவாக மறுகரையிலள்ள  தீவை நோக்கிச் சென்றன. அந்தத் தீவின் கரையில் கங்காருக்களை இறக்கிவிட்டு நண்பர்களை காப்பாற்றிய சந்தோசத்தில் துள்ளி விளையாடின. கங்காருக்கள் திக்குத் தெரியாமல் என்ன செய்வதென்று அறியாது திணறி நின்றன.


               டொல்பின்கள் கங்காருக்களைப் பார்த்து “ இனிப்பயப்படாதீர்கள் இது முயல் நண்பர்கள் வாழும் நாடுதான். அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் பேசும் மொழி  இனிமையானது. நாங்கள் முயல் நண்பர்களை அழைத்து உங்களை ஒப்படைத்து விடுகிறோம். அவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறி வாலினால் நீரில் அடித்து முயல்களுக்குச் செய்தி அனுப்பின.


டொல்பின்களின் செய்தி கேட்டு கடற்கரைக்கு படையெடுத்து வந்த முயல்கள் 

'அம்மாடியோ ' என்று மூக்கில் விரல் வைத்தன. 


குறும்புக்கார முயல்கள் கங்காருவின் அடியில் நின்று உயரம் பார்த்தன.


 “ யாரப்பா நீங்கள்”; என்றது ஒரு முயல்.


 “எங்கிருந்து வருகிறீர்கள”; என்றது மற்றொரு முயல்.


 “ எங்கட நாட்டைப்பிடிக்க வந்த கூட்டமோ தெரியவில்லை..? கொஞ்சம் கவனமாக இருங்கள்”; என்றது பிறிதொரு முயல். 


"சீச்சீ.. அப்படிச் சொல்லாதீர்கள். மனம் நோகப்பேசாதீர்கள். அவர்கள் ஏதோ துன்பம் அனுபவித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்"  என்றது தலைமை முயல்.


  இவர்கள் பேசிய மொழி விளங்காததால் கங்காருக்கள் டொல்பின்களையும் முயல்களையும் மாறிமாறிப்பார்த்தன. டொல்பின்கள் கரைக்கு வந்து முயல்களிடம் நடந்தவற்றைக் கூறின.


 டொல்பின்களை வியந்து பார்த்த கங்காருக்கள் உங்களுக்கு  இந்த மொழி எப்படித் தெரியும் என்று கேட்டன. அதற்கு டொல்பின்கள் நாங்கள் கடலில் வாழ்வதால் எல்லா நாடுகளுக்கும் சென்று வருகிறோம். இதனால் எங்களுக்கு பல மொழிகள் தெரியும்.  


இந்த மொழி எமது மூதாதையரின் முதல் மொழி என்பதையும் நாம் நன்கறிவோம். எனவே  இந்த மொழியை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.  இந்த மொழியைப் போலவே   முயல்களும்  இனிமையானவர்கள் என்று கூறின. 


முயல்கள் “கங்காருக்களை எமது உறவுகள் போல் பாதுகாப்போம”; என டொல்பின்களிடம் கூறி கங்காருக்களை தமது நாட்டிற்குள் அழைத்துச் சென்றன. வழியெங்கும் அந்தத்தீவின் அழகையும் கலாசார அம்சங்களையும் வியந்து பார்த்தவாறு கங்காருக்கள் சென்றன.


 முயல்கள் கங்காருக்களுக்கு தங்க இடமும் உணவும் அளித்தன. முயல்களின் நற்பண்புகளைப் பார்த்த கங்காருக்கள் அவர்களின் பண்பாட்டை விரும்பின. அந்த மொழியை ஆசையோடு கற்றுக் கொண்டன. தங்கள் பிள்னைகளுக்கு அதே மொழியில் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து கொண்டாடின. அப்பப்போ முயல்களும் கங்காருக்களும் டொல்பின்களும் கடற்கரையில் சந்தித்துப் பேசின,  குமரித்தீவின் நிலை பற்றி கேட்டறிந்து கொண்டன.


“இன்னும் சில நாட்கள் போனதும் "கங்காருக்களே உங்கள் ஊருக்கு நீங்கள் போகலாம். ஆனால் உங்கள் ஊர் இயற்கை அழகை இழந்து காட்சியளிக்கிறது” என்று டொல்பின்கள் கூறின. 


அதற்கு “நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் பசுமைப்படுத்துவோம். மரங்களை நாட்டி மகிழ்வோம். அலைகள் எம்மைத் தாக்காத வண்ணம் கரைகள் எங்கும் கற்களை அடுக்கி அணைகட்டுவோம”; என்று கங்காருக்கள் பதிலளித்தன. 


முயல்கள் “நாங்கள் உங்களுக்கு உதவுவோம”; என்று கூறின. சில நாட்கள் சென்றதும் கங்காருக்களும் முயல்களும் டொல்பின்களின் பெரும் துணையோடு குமரித்தீவுக்குச் சென்றன. தமது நாட்டின் அழிவைப் பார்த்த கங்காருங்கள் மண்ணைத் தொட்டு வணங்கிக் கொண்டன. அத்தீவை பசுமையாக்கும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டன. முயல்களும் டொல்பின்களும் பாரிய தொண்டாற்றின. சில வருடங்கள் சென்றதும் பசுமையடைந்து மிளிர்ந்து நிமிர்ந்து நின்றது குமரி…! அன்றிலிருந்து முயல்களும் கங்காருக்களும் டொல்பின்களும் ஒற்றுமையுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து வந்தன…!


 தமிழரசி. 


   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.