தேர்தல் களம் - வேட்புமனு ஆரம்பம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சோனியா, ராகுல் ஆகியோர் போட்டியிடாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவரைத் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 17 ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கை வியாழக்கிழமை (செப். 22) வெளியிடப்படுகிறது.
சோனியாவுடன் கெலாட் ஆலோசனை : இத்தேர்தலில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் போட்டியிட ஆர்வம்காட்டாத நிலையில், மூத்த தலைவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசி தரூர் எம்.பி. ஆகியோர் போட்டியிட ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் சோனியா காந்தியை அசோக் கெலாட் புதன்கிழமை சந்தித்தார். அப்போது, கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தில்லி வந்தடைந்ததும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த 40-50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். எனக்கு பதவி முக்கியமல்ல; கட்சி எந்தப் பொறுப்பை அளித்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன்.
நேரு-காந்தி குடும்பம் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களது அன்பு கிடைத்தது அதிர்ஷ்டமாகும். ராஜஸ்தான் முதல்வராக எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். அதனை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார்.
காங்கிரஸின் உதய்பூர் மாநாட்டு தீர்மானத்தில் "கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி´ என்பது வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக கெலாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
கட்சிப் பதவிக்கு மேலிடத்தால் ஒருவர் நியமிக்கப்படும்போதுதான் அது பொருந்தும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் அப்படியல்ல. மாநில கமிட்டி உறுப்பினர்கள் 9,000 பேரில் யார் வேண்டுமானாலும் போட்டியிடக் கூடிய பொதுவான தேர்தல். அதன் வேட்பாளர், எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோகூட இருக்கலாம் என்றார் அவர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர் சசி தரூரும் முனைப்பு காட்டி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்து கெலாட் கூறுகையில், தலைவர் தேர்தலில் போட்டி இருந்தால், அது உள்கட்சி ஜனநாயகத்துக்கு நல்லதே. பாஜக தலைவர் பொறுப்பை ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா ஆகியோர் ஏற்றபோது அதுகுறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலை ஊடகங்கள் பெரிதாக பேசுகின்றன. அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான் என்றார்.
சசிதரூர்: காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரியை சசி தரூர் தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் கேட்டறிந்தார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சசி தரூர் சந்தித்தார். அப்போது, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது முடிவை தரூர் அவரிடம் கூறினார். "சோனியா, ராகுலின் ஒப்புதல் தேவையில்லை´ காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதல் தேவையில்லை என்று காங்கிரஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் கொச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட முன்வரலாம். அவர்களுக்கு மாநில அளவில் 10 காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவு இருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கோ வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கோ சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவையில்லை.
அதே நேரத்தில் அனைவரும் கலந்தாலோசித்து கட்சித் தலைவரை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கட்சியின் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இதுவே மறைந்த மூத்த தலைவர் காமராஜரின் கருத்தாகவும் இருந்தது. அதே நேரத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றால், தேர்தல் நடத்துவது சிறப்பான முடிவாக இருக்கும்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் வெள்ளிக்கிழமை (செப். 23) ஒருநாள் ஓய்வு அளிக்கப்படுகிறது. அந்த நாளில் ராகுல் காந்தி தில்லிக்கு செல்ல இருக்கிறார். தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அவர் செல்வதாக கூறுவது தவறு. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார் என்றார்.
"ராகுலிடம் சம்மதம் பெற முயற்சி´ காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்க கடைசிக்கட்ட முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
"காங்கிரஸ் தலைவராக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் மேற்கொண்டால், அது கட்சிக்கு புதிய ஒளியைப் பாய்ச்சும்´ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க வற்புறுத்தி பல்வேறு மாநிலக் காங்கிரஸ் குழுக்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இதுதான் தொண்டர்களிடம் பொதுவாக நிலவும் உணர்வு. எங்கள் வேண்டுகோளை ஏற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பார் என்பது எங்கள் நம்பிக்கை என்றார்.
"யார் தலைவரானாலும் ராகுலின் கைப்பாவைதான்´ காங்கிரஸ் கட்சியின் தலைவராக அசோக் கெலாட், சசி தரூர் என யார் வந்தாலும் அவர்கள் ராகுல் காந்தியின் கைப்பாவையாகவே இருப்பார்கள் என்று பாஜக கூறியுள்ளது.
தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இது தொடர்பாக கூறியதாவது: ராகுல் காந்தி நடத்தும் நடைப்பயணத்தை ஊழல் ஒற்றுமை நடைப்பயணம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், 2ஜி ஊழலில் காங்கிரஸின் கூட்டாளியான திமுகவின் ஆதரவுடன் கன்னியாகுமரியில் இருந்து இந்த நடைப்பயணம் தொடங்கியுள்ளது.
தில்லி ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதும் முறைகேடான கலால் வரி கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதைத்தான் ஆம் ஆத்மி நகல் எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தலால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அசோக் கெலாட், சசி தரூர் என யார் கட்சித் தலைவரானாலும் அவர்கள் ராகுல் காந்தியின் கைப்பாவையாகவே இருப்பார்கள் என்றார்.
கருத்துகள் இல்லை