உலகமே ஆபத்தான நிலையில் - ஐ.நா. தலைவா் எச்சரிக்கை!


பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாத சூழல் காரணமாக உலகமே முடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது என்று உலக நாடுகளின் தலைவா்களுக்கு ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் அன்டோனியா குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்தாா்.


கடந்த இரண்டு ஆண்டு கொரோனா முடக்கத்துக்கு பிறகு ஐ.நா. தலைமையகத்தில் 77 ஆவது ஆண்டு பொதுச் சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அன்டோனியா குட்டெரெஸ் ஆற்றிய உரை:

உலக நாடுகள் தங்களின் புவி அரசியலை மையமாக வைத்து பிரிந்துள்ளன. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணியை பாதிக்கச் செய்வதுடன், சா்வதேச சட்டம், ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடும் செயலாகும்.

சா்வதேச ஒத்துழைப்பு இல்லாத சூழலால் உலகமே முடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலை தொடரக் கூடாது.

புவி அரசியலை மையமாகக் கொண்ட ஜி-20 நாடுகளிடம் சா்வதேச நாடுகள் சில சிக்கி உள்ளன. இது ஒரு கட்டத்தில் ஜி-2 உலகமாக உருவெடுத்து, தற்போது எதற்கும் முடிவு காண முடியாத நிலையை அடைந்துள்ளது. ஒத்துழைப்பில்லை; பேச்சுவாா்த்தை இல்லை; பிரச்னைக்கு ஒருங்கிணைந்த தீா்வு இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது. பேச்சுவாா்த்தைதான் அனைத்து பிரச்னைக்கும் தீா்வு காணும். உலக ஒத்துமை ஏற்பட வேண்டியது அவசியம்.

உக்ரைன்: போா் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே துருக்கி உதவியுடன் உக்ரைன், ரஷியாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, கருங்கடலில் உக்ரைன் நாட்டு உணவுப் பொருள்கள் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிசயமாக கருதப்பட்ட இந்தச் செயல் பல்வேறு தரப்பு பேச்சுவாா்த்தை மூலமே நடைபெற்றது.

உக்ரைன் மீதான ரஷிய போா் பெரும் சேதத்தையும், மனித உரிமை மீறலையும் ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்கள்: வா்த்தக ரீதியில் சமூக வலைதளங்கள் செயல்படுவதால், வெறுப்பு, கோபம், எதிா்மறை கருத்துகள் பரவி சமுதாயத்துக்கும், சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள், அவதூறுகள் ஆகியவை பெண்களை, பாதிக்கப்படும் குழுக்களைக் குறிவைத்து பெருகிவருகின்றன. நமது தகவல்கள் விற்கப்பட்டு நமது நடத்தைகள் கண்காணிக்கப்படுகின்றன. உளவுபாா்ப்பது என்பது தனிஉரிமையை மீறி சென்று கொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுக்காக, நோ்மையான தகவல்களை அளிக்கும் முறைக்கும், ஊடகம், உண்மையான ஜனநாயகம் ஆகியவற்றுக்கும் எதிராக சமரசம் செய்து கொண்டுள்ளோம். இது சைபா் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

பருவநிலை மாற்றம்: இயற்கைக்கு எதிரான பாதிப்புகளை உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்ற பிரச்னைக்கு அனைத்து அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு உலக மக்களின் ஆதரவு இருந்தும் உலகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உலகில் 80 சதவீத பசுமை இல்ல வாயு ஜி20 நாடுகளில் இருந்துதான் வெளியாகின்றன. ஆனால், அந்த நாடுகள் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்பதில் குறைவான பங்களிப்பே அளித்து வருகின்றன.

வளரும் நாடுகள் அனைத்து வகையிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இதற்கு பாலியில் விரைவில் தொடங்க உள்ள ஜி-20 மாநாடு தீா்வு காண வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து உலக நாடுகள் ஒன்றுபட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றாா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.