சிந்தனை வரிகள்!!

 


ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். 

அவன் திருடாத இடமே இல்லை. 

அவன், மக்களுக்குக் கடும் அவதியை தந்ததால் ஊர் மக்கள் அனைவரும் ராஜாவிடம் சென்று முறையிட்டனர். 

அவன் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்ததால் அரசர், இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என அறிவித்தார். 

மந்திரி தேடிச் செல்லும் போது அந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டான். 

மந்திரி ஒரு சூழ்ச்சி செய்தார்.

 "உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார்.

 நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கிறேன்." என உறுதி அளித்தார். 

"சரி"என இந்த திருடனும் சம்மதித்தான்.

அந்த திருடனுக்கு திருநீறும் ருத்ராட்சமும் அணிவித்து, ஒரு சன்யாசி போல் வேடமிட்டார் மந்திரி. 

பின் அவனிடம், 

"நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இரு. 

ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல். 

கடைசியாக அவர் தன் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். 

அதை வாங்கி என்னிடம் தா, 

நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன்." என சொன்னார். 

பின் அந்த மந்திரி, ராஜாவிடம் சென்று, "பற்றுகளை விட்டு மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சன்யாசியை கண்டுள்ளேன். 

அவரை தரிசித்து தங்களின் மனக் கவலையை நீக்கிக் கொள்ளுங்கள்." என்றார்.

அரசர் சென்று மரத்தடியில் இருந்த அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வணங்கி, "ஐயா, தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மாலை தருவேன் அதை எற்றுக்கொள்க." என்றார். 

சன்யாசி, "வேண்டாம்". என்றார். 

பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம், உயர்ந்த நகை, பணம், என தானமாக தந்தார். 

சன்யாசி எதுவும் வேண்டாம் என்றார். 

பின் ராஜா, "நீயே சத்தியசீலன்! என் ராஜாங்கத்தில் பாதியை தங்களுக்கு தானமாக தருகிறேன். 

நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும்." என்றார். 

இப்போது மந்திரிக்கு சந்தோஷம்! 

நாம் சொன்னது போலவே நடிக்கிறான் என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தார்! 

ஆனால் 

சன்யாசி இதற்கும் வேண்டாம் என்றார்.

மந்திரி முகம் மாறி விட்டது. 

"அடப்பாவி! 

வேண்டாம் என்று சொல்லி விட்டானே, 

இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, 

என்ன செய்வது?" என மனத்துக்குள்ளே குழம்பி நிற்க, 

கடைசியாக ராஜா தன் மகளையே சன்யாசிக்குத் திருமணம் செய்து தருகிறேன் என கூறினார். 

அதற்கு அந்த சன்யாசி, 

"அரசே! 

நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இது எல்லாம்? வேண்டாம்!" என்றார். 

"நீரே உண்மையான பற்றற்ற ஞானி!" என அவரை விழுந்து வணங்கி சென்றார் அரசர். 

அதன் பின் அந்த மந்திரி வந்து, "என் வயத்துல இப்படி மண் அள்ளி போட்டு விட்டாயே, இது நியாயமா?" என சண்டை போட்டார்.

அதற்கு அந்த சன்யாசி, 

"ஐயா நான் திருடன் தான். 

எப்போது நீங்கள் என் மீது திருநீறும் ருட்த்ராட்சமும் தரித்தீர்களோ, 

அப்போதே என் மனம் மாறிவிட்டது. 

மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா, என் கோலத்தை பார்த்து என் காலில் விழுந்தார். 

அந்த பணிவு எனக்காக அல்ல, 

என் மேல் உள்ள இருந்த திறுநீறுக்கும் ருத்ராட்சத்துக்கும் தான். 

நான் எதை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனோ அதை விட உயர்வான பொருள் தான் எனக்கு கிடைத்தது. 

விலை மதிப்புள்ள உலகியல் பொருட்களை எல்லாம் நான் வேண்டாம் என்றால், விலை மதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான், என்பதை புரிந்து கொண்டேன். 

அதுதான் எனக்குத் தேவை." என்றார் அந்த சன்யாசி.

இந்த புரிதல் தான் வாழ்வின் ரகசியம். நம் பிறவிப் பயன். 

நாம் இறைவனை கருவியாக வைத்து, இறைவனிடத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை கேட்கிறோமே தவிர அவரை கேட்பதில்லை. 

"இறைவா! நீ மட்டும் போதும்." என்று அர்ஜுனனைப் போல் நாம் அவனையே வேண்டி பெற்றால், நம் ஜென்மம் கடைத்தேறி விடும்....

படித்ததில் பிடித்தது... 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.