சத்தியம் காத்து நின்ற செம்மல்களே..!

 


மாரி மழை பொழிகிறது

எங்கள்

கரிசல்காட்டு நிலமெங்கும் 


கனிவான பேச்சாலே

எமதுள்ளம் கவர்ந்தோரே

தவழ்ந்த இடம் பெரிதென்று

மணவாழ்வை துறந்தீரே 


கும்மிருட்டு நேரத்திலும்

அம்புலியைத் தேடாமல்

மரணத்தின் நிழலில்

துயில் கொண்டெழுந்தவர்காய்

ஓசை இன்றி 

இதயமும் அழுகிறது 


மதிகொண்டு இறப்பை

பல வழியில் வென்று

சத்தியம் காத்து நின்ற செம்மல்களே 


நீங்கள் உறங்கிய இடங்கள்

சல்லி சல்லியாய் போனதென

எம் மனங்கள் எரிகிறது

கண்டல் மரங்கள் அழுகிறது 


நிலமே சுவாசமென வாழ்ந்தோரே

மண்ணோடு உரமாகிப்போன 

உமக்காக

கண்ணீர்த் துளிகளோடு

அர்ச்சனைப் பூக்களையும் தூவுகிறேன் 


உம் அர்ப்பணிப்பை எண்ணியே

எம் ஆன்மாவும் சிலிர்க்கிறது 


தென்னங்கீற்றில் தென்றலும் வீசிட

தீக்குழம்பில் குளித்து

வரலாறாய் நிலைத்த

அணையாத தீபங்களே 


எம் மனதோடு வாழும்

நீங்கள்

அதிசயப் பிறவிகள் அல்லவா...? 

-பிரபா அன்பு-

06.11.2022


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.