உக்ரைனிலிருந்து 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேற்றம் !


 ‘ரஷ்யா-உக்ரைன் போரால் இதுவரை 1.4 கோடி பேர் உக்ரைனில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’ என்று ஐநா அகதிகள் பாதுகாப்பு ஆணையர் பிலிப்போ கிராண்டி கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று நியூயார்க்கில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரியில் துவங்கியது. அதன் பின்னர் உக்ரைனில் இருந்து இன்று வரை 1.4 கோடி பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். கடந்த சில 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான இடம் பெயர்வு இது.

உக்ரைனில் இருந்து வெளியேறி அகதிகளாக உள்ள இவர்கள், அடுத்து வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போதிய உணவு, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடும் குளிரை எதிர்கொண்டால், உயிரிழப்புகள் ஏற்படும். துரதிருஷ்ட வசமாக அவர்களுக்கு, குடியேறிய நாடுகளின் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு நாளையும் அவர்கள் சிரமத்துடன் கழிக்க வேண்டிய பரிதாபமான நிலையில் உள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவி வருகின்றன. ஆனால் இது, பெரிய கடலில் ஒரு துளி என்பது போல மிகவும் குறைவாக உள்ளது. உலக நாடுகள் முன்வந்து, இவர்களுக்கான உதவி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆனால் அதை விட முக்கியம் ரஷ்யா-உக்ரைன் இடையேயான நடந்து வரும் இந்த அர்த்தமில்லாத போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.