மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம்!!

 


மலேசியாவின் 10 ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.


மலேசியாவின் சிரேஷ்ட எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தேர்தல் நிறைவடைந்து சில நாட்களின் பின்னர், நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக, அந்நாட்டு மன்னர் அனுமதியளித்துள்ளதாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு (09:00 GMT) மன்னர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

வாரயிறுதியில் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் தொங்கு நாடாளுமன்றம் உருவானதையடுத்து, மன்னர் சுல்தான் அப்துல்லாவால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார்.

நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வரும், முன்னாள் பிரதமர் முகைதின் யாசினும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை.

சனிக்கிழமை நடந்த தேர்தலில் அன்வரின், பக்காத்தான் ஹராப்பான் (PH) கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆசனங்களை கொண்டிருக்கவில்லை.

222 ஆசனங்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை பெறுவதற்கு குறைந்தபட்சம் 112 ஆசனங்களை பெற வேண்டும்.

எனினும், இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமின் பக்காதான் ஹராப்பான் கட்சி 82 ஆசனங்களையும், முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் பெரிகத்தான் நெஷனல் 73 ஆசனங்களை வென்றுள்ளன.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் ஐந்து நாட்கள் கூட்டணிக்கான தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இறுதியில், மலேசியாவின் மன்னரான அப்துல்லா, அனைத்து தலைவர்களையும் இன்று அரண்மனைக்கு வரவழைத்து, கலந்துரையாடலை மேற்கொண்டு பிரதமர் தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கூட்டணி, கட்சிகளுடன் சிறுபான்மை அரசாங்கமா? அல்லது அனைத்து முக்கிய கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் உருவாகுமா? என புதிய அரசாங்கம் எந்த வடிவத்தில் அமையும் என்பது தெரியவில்லை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.