தங்க ஆபரணங்களை அணிந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை!


 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கெரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


விமானப் பயணிகள் அணியும் தங்க ஆபரணங்களுக்கு தரம் அல்லது வரம்பு இல்லை என்ற அனுமதியைப் பயன்படுத்தி, நாளாந்தம் சுமார் 50 கிலோ தங்கத்தை கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில கடத்தல்காரர்கள் நாளாந்தம் தயாரிக்கப்பட்ட 24 கெரட் தங்க ஆபரணங்களுடன் அருகிலுள்ள நாடுகளுக்கு வருவதால், மாதத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை நாடு இழக்க நேரிடுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அண்மையில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், உரிய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேவையில்லாமல் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு இலங்கைக்கு விமானப் பயணிகளாக வருபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, தங்க ஆபரணங்களின் நிலைமைகள் மற்றும் அளவுகளை கண்டறிய விசேட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துமாறு சுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கோ அல்லது சாதாரண விமானப் பயணிகளுக்கோ இந்த தீர்மானம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.