22 வயது இலங்கை பெண் 25 இலட்சத்திற்கு ஓமானில் விற்பனை!!

 



இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து வேலை வாங்கித் தருவதாக கூறி ஓமானில் நடத்தப்படும் பாரிய மனித கடத்தல் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் அம்பலப்படுத்தியுள்ளது.ஓமானில் இலங்கைப் பெண்கள் பல்வேறு தவறான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சிடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.


மனித கடத்தல் - கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் அவர்களின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று அதிகாரிகள் கொண்ட குழு ஒக்டோபர் 3 ஆம் திகதி ஓமன் சென்றது.


ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த குறித்த குழுவினர், பல்வேறு கெடுபிடிகள் காரணமாக ஓமானில் உள்ள சுரக்ஷா இல்லத்தில் தங்கியிருந்த 45 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.சுற்றுலா விசாவில் அந்நாட்டிற்குச் சென்ற அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேலை செய்த வீட்டை விட்டு வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது.


அவர்கள் பணிபுரிந்த வீடுகளின் உரிமையாளர்களான சுல்தான்களிடம் குறித்த நபர்களின் கடவுச்சீட்டுக்கள் உள்ளதால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளமை தெரியவந்துள்ளது.அந்தந்த வீட்டில் தங்கியுள்ள 45 பெண்களில் 6 பேர் அதிக வேலை செய்ய வேண்டியிருப்பதால் தாங்கள் வேலை செய்த வீடுகளை விட்டு தப்பி வந்துள்ளமை தெரிவந்துள்ளது.


மேலும் 8 பேர் எல்லை தாண்டி ஓமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.மேலும், மேலும் ஒரு பெண் நாட்டில் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் உள்ள முகவர் நிறுவனத்தின் அந்நாட்டில் உள்ள பிரதிநிதி பெண் ஒருவரால் குறித்த பெண் விபச்சாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த பெண்கள் ஏலம் கோருவது போல் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு அந்நாட்டு சுல்தான்களுக்கு விற்கப்பட்டுள்ளனர்.


22 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அங்கு உள்ளதாகவும், இளம் பெண்கள் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், அங்கு பெண்கள் 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை, இவ்வாறு வந்த பெண்ணொருவர் ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அம்பலப்படுத்தியுள்ளனர்.மேலதிக விசாரணைகளில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓமானில் உள்ள அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள குடிவரவு அதிகாரிகள் குழு இந்த வலையமைப்பை நடத்துவதாக தெரியவந்துள்ளது.


இலங்கையில் பல்வேறு பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் பெண்களை இலக்கு வைத்து இவர்கள் இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த ஆஷா திஸாநாயக்க என்ற பெண்ணே இந்த மனித கடத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அதன்படி, அவரை கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் கேட்டபோது, ​​ஓமானில் இருந்து பெண்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்குச் சென்றிருப்பதால் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர முடியாது என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளருக்கு நேற்று (17) பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.சந்தேகநபர் இலங்கைக்கு வருவதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் அவரே தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.