பேஸ்புக் விளம்பரத்தால் ஏமாற்றமடைந்த இளைஞன்!

 


பேஸ்புக் மூலம் அறியப்பட்ட ஒருவரிடமிருந்து 10,000 கனேடிய டொலர்களை கொள்வனவு செய்யச் சென்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து 2.7 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். களனி, வனவாசல, பொசோன் வத்த பகுதியில் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


10,000 கனேடிய டொலர்களை மாற்றுவது தொடர்பாக ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்த வங்கி ஊழியர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஒரு கனேடிய டொலரை ரூ.275 வீதம் மாற்ற தயாராக இருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார்.


நாட்டில் கனேடிய டொலர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், குறைந்த விலையில் கிடைக்கும் கனேடிய டொலரை மாற்ற விரும்பியதாக வங்கி ஊழியர் பேலியகொட பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.



அதன்படி, குறித்த நபர் வசிக்கும் களனி, வனவாசல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வங்கி ஊழியரும் அவரது தந்தையும் சென்றுள்ளனர். எனினும், அவ்விடத்திற்கு வந்த இருவர், வங்கி ஊழியரின் முகத்தில் விஷப் பொருளை வீசிவிட்டு, பணப்பையை பறித்க்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


எனினும், கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச் சென்ற போது, ​​30,000 ரூபா பணம் கீழே விழுந்துள்ளது. 2.7 மில்லியன் ரூபா பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.



விசாரணையில், போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவரே இந்தத் திருட்டைத் திட்டமிட்டுச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. வங்கி ஊழியரை தான் முன்னர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வலை வீசி அழைத்துள்ளார்.


ஆனால் அவர் தற்போது அந்த வீட்டில் வசிக்கவில்லை என்றும், வேறு தரப்பினர் வாடகைக்கு குடியிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



வங்கி ஊழியரை ஏமாற்றி பணத்தை கொள்ளையிட்ட பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.