என் காதல்..... கோபிகை!!

 


என்மன ஓரங்களையெல்லாம்

நிறைத்துக் கிடக்கிறது இந்தக் காதல்...

என் செந்தூர வானத்தின் 

மகரந்த மணிகளாய் இந்தக் காதல்...


ஒய்யார மாளிகைக்கு 

உன்னத வாசலாய் இந்தக் காதல்.

ஆனந்த  மழையின் 

அற்புத துளிகளாய் இந்தக் காதல்..


வெள்ளைப் புறாக்களே..

வேடந்தாங்கல்களே...

உயிரின் பாடல்களே...

உணர்வின் சாரல்களே...


கடல் தேவர்களே

வனதேவதைகளே

மடைமாற்றங்களே

மழைத்தூறல்களே...


விழுதெறிந்த விதைகளே

நிழல் தந்த விருட்சங்களே

மந்தார வானத்தின்

மேகத்துளிகளே....


புவனம் பாடிய புதுப்பாடல்களே

இயற்கை பூசித்த இரண்டாம் கடவுளரே

அக்கினியை விழுங்கி கந்தகத்தை கொப்பளித்த

காரிருள் வெளிச்சங்களே...


எங்கள் பாடலின் பொருளாக

எங்கள் தேடலின் அருளாக 

சினமறியா சிற்பங்களானீர்..

கால நதியின் கடவுளரானீர்...


இதயத்தில் நிறைந்து

இமைகளில் கரைந்து

நினைவுகளில் சுமந்து

கூடுகளாய் நடக்கிறோம்...


எந்தையும் தாயும் 

குலாவி மகிழ 

நின் ஆவி தந்த 

நிறை கலசமானீர்....


தனக்கென வாழாத 

பாவத்தை துறந்து

பிறர்க்கென வாழ்கின்ற 

யோகத்தை அணைத்தீர்...


மொழிக்கு மகுடம் தரித்து

குலம் வாழ, குவலயம் பேச,

காலத்தின் வாசல்களில் 

கோலங்கள் நீரானீர்...


காட்டு வெள்ளமாய் 

கரைபுரண்ட நீங்கள்..

மானுட வெளிச்சமாய்

மறை தந்து போனீர்...


உலகத்தின் கரங்களில்

சில விசித்திரமான

துரதிஸ்டங்களும் 

நிறைந்திருக்கும்...


உங்கள் உயரங்கள் எட்டமுடியாதது

உங்கள் உன்னதங்கள் சொல்லிமாளாதது

எங்கள் விழி மடல்களை

உங்கள் பாதார விந்தங்களில் பணிகிறோம்...


இந்த அநாமதேயத்தை 

ஆகர்ஷிக்கிறது என் காதல்...

பாடலும் தேடலுமாய்

என் ஆவியோடு இந்தக் காதல்....


கோபிகை...

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.