கனவு - பிரகலாதன்!!

 மெல்ல கண்களை மூடிக்கொள்கிறேன்

தூரல் மழையின் துளிகள் 

என் அமைதியின் தாளங்களாகின்றன.

நீண்ட தனிமையின் நினைவுகள் 

மனதிலோர் படமாக்கப்படுகின்றன

மூடிய இமைகளுக்குள் பதுங்கி கிடக்கும் துளிகள் மெல்ல மெல்ல சொட்டுகின்றன

அவிழ்ந்த முடிகள் எனைத்தழுவும் காற்றில் கலைந்து வீழ்கின்றன

ஆகாயத்தில் பறப்பது போல் உணர்வு 

அந்தரத்தில் மிதக்கின்றேன்

என் உடலின் இயந்திரம் கவிழ்க்கப்பட்டதை அறிகிறேன்

துளை பாயும் செங்குருதியின் 

ஊர்தல் அடங்குகிறது

என் தேகம் சூடிழந்து கொள்கிறது

பனிக்காற்றில் பறப்பதாய் எண்ணுகிறேன்

அடி முதல் நுனி வரை யாவும் இறுகிவிட்டன

மேலெழுந்துவிட்டேன் ஏதுமற்றவனாய் அடங்கிவிட்ட என்னை காண்கிறேன் 

நீற்றுடம்புக்குள் முடங்கிக் கிடந்த என் ஆசைகள் ஒவ்வோர் மூலையிலும் சுற்றுவதை காண்கிறேன் 

இந்த வானம் எனது பூமி எனது என எட்டி உயர்ந்து கர்ஜிக்கின்றேன்

இதுவரை கண்டிடா சுதந்திரம் 

நான் பெற்ற வரமென இறுமாப்பாய் உணர்கிறேன்

என் காதல் தழுவிய தென்றலாய் வீசுகின்றேன் எனை சுவாசிக்க யாரால் முடியும்

குதித்தெழுந்து ஓடுகின்றேன் ஏசுவதற்கு யாருக்கும் கேட்காதபடி

என் மொழியில் பாடுகின்றேன்

உங்கள் காதுகளுக்கு மௌனராகமாக

என் ஆசைக்கு எழுந்து விட்டேன் 

ஏனென்ற கேள்விகள் வலுவிழக்கப்பட்டதால் ஏதும் தடுக்க இடமில்லை 

காற்றோடு காற்றாய் கலந்த எனக்கு 

காலம் தந்த காயங்கள் எத்தனை

இன்று என் காயங்கள் ஆற்றுவது காலனின் கப்பம் தான் போல

மேகமிடை ஊடுருவும் கதிர்களுக்கிடையே கணக்கிட முடியாத என் வேகம் 

பிறந்துவிட்டேன் என் வாழ்வினை பெற்றுவிட்டேன் 

ஆசைகளொன்றுமில்லாமல்  மகிழ்கிறேன்

நான் நானாக இருக்கிறேன் 

ஆழ்மனதின் இடுக்கிலிருந்து பேசுகின்றேன் 

அவிழ்க்கப்பட்டதை நினைக்கும் வேளை என் கண்ணீர் காய்ந்து விட்டதை உணர்கிறேன் 

ஒட்டிக்கிடந்த இமைகள் திறந்துவிட

கண்டதை நினைத்து ஓர் ஏளனச்சிரிப்பு மட்டும் தான் 

கால்களை அவிழ்த்து நடக்கலாயினேன் 

நாளைக்கும் ஒரு கனவிருக்கும் என்ற நம்பிக்கையுடன்...
-பிரகலாதன் - 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.