யாழில் கடனுக்கு மீற்றர் வட்டி: கட்டாத நபர்களை கடத்தி சித்திரவதை செய்த ஒருவர் கைது!
யாழ். நகரில், மீற்றர் வட்டிக்கு கொடுத்த பணத்துக்கான வட்டியைக் கொடுக்காத நபர்களை கடத்தி சித்திரவதை செய்து, அடித்து துன்புறுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் பட்டா ரக வாகனத்தால் வீதியில் பயணித்த காரை மோதி விபத்தை ஏற்படுத்தி, காரில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தி காருடன் தீ வைக்க முயன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும், மீட்டர் வட்டி பணம் வசூலிக்கும் கும்பலுக்கும் தொடர்புள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மீற்றர் வட்டிக்கு கொடுத்த பணத்துக்கான வட்டியை மீள கொடுக்காத நபர் ஒருவரை இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய குழுவொன்று தோட்ட வெளிப் பகுதி ஒன்றுக்கு கடத்தி சென்று, சித்தரவதை செய்து, தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டு அளவெட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நபர்களிடம் “கொமிசன்” அடிப்படையில் வட்டி வசூலித்து கொடுக்கும் வேலையை குழுவாக செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வட்டி பணத்தை கொடுக்காத நபர்களை கடத்தி சென்று சித்திரவதை புரிந்து அடித்து துன்புறுத்தி வட்டி பணத்தை வசூலித்து வந்துள்ளனர்.
பணத்தைக் கொடுத்த நபர்களின் உத்தரவில் நடைபெறும் இந்த செயற்பாட்டை காணொளிகளாக பதிவு செய்து பணம் கொடுத்த நபர்களிடம் அந்த காணொளிகளையும் கொடுத்து வந்துள்ளனர்.
அதேவேளை இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய சென்றால் அங்கு கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர் அவர்களின் முறைப்பாட்டை ஏற்காது திருப்பி அனுப்பி வைப்பதுடன் அவர்கள் பொலிஸ் நிலையம் வந்த விடயத்தை வட்டிக்கு பணம் கொடுத்த நபர்களிடம் அறிவித்தும் விடுவார்.
அதனால் பணம் கொடுத்தவர்கள் முறைப்பாடு செய்ய சென்றவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் வட்டி பணத்தை வசூலிக்கும் குழுவை சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வட்டி வசூலிப்பதற்காக ஆட்களை கடத்தி சித்திரவதை புரியும் காணொளி காட்சிகளை ஒரு தரப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 20 க்கும் மேற்பட்ட காணொளிகள் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்
கருத்துகள் இல்லை