உனக்குள் தேடு....!!

 


தலைவர் இருக்கிறார் இல்லை 

என்பதற்கு அப்பால்

அந்த உன்னத தலைவனின்

சிந்தனையை சிற்பமாய் செதுக்கிட

நீ என்ன செய்தாய்!


உனக்குள் தேடு!!


பெரும் தலைவனின் புரட்சிப்பாதையில்

வீரகளமாடி விடியலுக்காய்

விதையாய் உறங்கும்

மாவீரரின் தாகத்தை தீர்க்க

நீ என்ன செய்தாய்!


உனக்குள் தேடு!!


நான் பெரிது நீ பெரிதென்று வாழாது நாடு பெரிதென்று வாழ்

தலைவரின் ஆணையின் அறத்திலே

இற்றைவரை  உன்னால்

என்ன செய்ய முடிந்தது!


உனக்குள் தேடு!!


2009 பின் பிறமுதுகு காட்டி

அறத்தின் பாதையில் அணுவளவும்

அசையாது போனாயே! வசைபாடுவதைத் தவிர

இசைந்துபோகாத வீணராய் இனமானம் மறந்தாயே!

சுருண்டு கிடப்பதை உணராத 

புழுவாய் ஆனாயே!


உனக்குள் தேடு!!


கண்ணுக்கு முன்னால் 

களமாடிய பொழுது

கைதட்டி ஆரவாரித்த நீங்கள்

மறப்போர் புரிந்து மண்மடி உறங்கியதும்

வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும்

ஆமைகளாய் ஆன நீங்கள்

ஆரவாரம் போடுவதில்

யாருக்கு தீனி போடுகின்றீர்கள்!


உனக்குள் தேடு!!


எமது இனத்திற்கா போராடு

அதுவும் உண்மையாய் போராடு

நெறிபுரளாக் கொள்கையோடு போராடு

மக்களுக்காக மானசீகமாக போராடு

மாவீரரின் நம்பிக்கைக்காக போராடு

மண்ணின் சுபீட்சமான வாழ்வுக்காக போராடு

அங்கு  தலைவர் இருப்பார்!


உனக்குள் தேடு!!


சருகுகளாய் காலில் மிதிபடும் போது மட்டும்  சரசரத்தல் போதாது!

கருக்கொண்ட வலியிலிருந்து

வலிமையாய் மீள்தலே

உயிர் கொண்ட இலட்சிய

நெருப்பிற்கு  நெய்யாய்

மாறும்

அதுவரை

உனக்குள் தேடு!!


விட்டுக் கொடுக்காத

விடம் தின்றவரின்

கொண்ட கொள்கையை அள்ளி விழுங்க

அண்ட வெளியில் அகன்று நிக்கிறது

அதிகார

வாய்கள்!

எனவே

உனக்குள் தேடு!!


தலைவரின்

வழிகாட்டுதலை

உனக்குள் இருத்து!

தணியாத தாகத்தை தீர்க்க

உனக்குள் அப்பிக்கிடக்கும்

சுயலத்தை மாற்று!


இல்லையேல்

இதுவும் கடந்துபோகும்!

எம் இதயமும்

வெந்து போகும்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.