ஏமாற்றம்.... !!


நம்பிக்கை 

வார்த்தைகள் காற்றோடு

காற்றாக கலந்து 

கானல் நீராக கரைகின்றபோது

ஏமாற்றம்

சிம்மாசனம்

ஏறுகின்றது!


அளவுக்கு மிஞ்சிய அன்பு

நினைவுக்கும் ஒட்டாமல் 

புறம் தள்ளும் அசுத்தக்காற்றில்

மூச்சுத் திணறி 

காற்றுப்பை வெடித்து

சிதறும்போது

சிதலங்களாக சிதறும்

இதயத்திற்கு தெரியும்

எமாற்றத்தின் வலி!


ஒன்றாய் சிறகடித்து

வானத்தின் எல்லையில்

கூடுகட்ட நெடுநாளாய்

இறக்கை விரித்து

பறக்கும் இலட்சிய 

பறவைகள் கூட்டத்தில்

பருந்தாய் உருமாறிய

சுயலநலப்பறவையொன்றின்

பாதை மாறிய பறப்பில்

தெரிகிறது

திசை தெரியாத கூர்மையும்

ஏமாற்றமும்!


நம்பிக்கை தேரில்

மனுநீதிச்சோழனாய்

உருமாறியதாய்

பாசங்கு செய்து

பயணம் செய்யும்

காக்கை வன்னியர் 

கூட்டத்திற்கு தெரியும் 

ஏமாற்றுதலின்

உச்சம்!


சதைப்பிண்டத்தில்

கொண்ட பசியில்

பிஞ்சென்ன காயென்ன

கடித்து குதறும்

காமமிருகத்தின்

வேட்டைப்பற்களுக்கு

தெரியுமா?


அழகான வாழ்வு

அழிந்துபோன

ஏமாற்ற வடுக்களின்

ஆழம்!


பத்து மாதம் சுமந்து

பத்திரமாய் கருவறையில்

பாதுகாத்து

நோய் நொடிகள் தீண்டாது

மெய் மறந்து தூங்காது

குழந்தையின் உதைப்பில்

குதூகலித்து

அழகான உலகத்தில்

முகை அவிழ்க்கும்

முல்லைப் பூவாய்

வாசம் வீசும் வரை

சுவாசத்தின் இடுக்குகளில்

அள்ளி அணைத்து வைத்து

அன்பைப் பருக்கும்

அன்னையின் தலைமயிரை

பிடித்து வீசும் பிள்ளைக்கு

தெரியுமா?


அன்பின் ஆழத்தில் பாய்ந்த

ஏமாற்றமெனும் ஈட்டி

குத்திக் குருதி வடிந்த

கொடிய இரணம்!


✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.