ஏன் இத்துணை முக்கியத்துவம்?

 


இந்து சமுத்திரத்தில் அடிக்கடி அலைகளை ஏற்படுத்தும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது கச்சதீவு. புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ஆண்டுகளிற்கும் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகளிற்கும் இடையில் நீரில் இருந்து இந்த நிலப்பரப்பு மேலுயர்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

    

நெய்தல் நிலத்திற்குரிய ஊரிகளும் சிப்பிகளும் சிறு பற்றைகளும் நிறைந்துள்ள இந்தத் தீவின் விசாலம் 163 ஏக்கர்களாகும். நெடுந்தீவில் இருந்து 20 கிலோ மீற்றர்கள் தொலைவிலும் இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீற்றர்கள் தொலைவிலும் கச்சதீவு அமைந்துள்ளது.

  

தற்பொழுது இலங்கையின் வசமுள்ள கச்சதீவின் நிர்வாகம் வடக்கின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் கச்சதீவின் நிர்வாகமும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இராமநாதபுரம் ஜமீனின் நிர்வாகத்தில் குத்தகைக்கு விடப்படுகிற நிலப்பரப்பாகவும் கச்சதீவு இருந்திருக்கிறது. இராமநாதபுரம் மாவட்ட புள்ளி விபர கையேடுகள் இதனை உறுதி செய்கின்றன. ஆனால் எப்படி கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பது சுவாரஸ்யமான கதை.

  

1921 ம் ஆண்டில் கச்சதீவின் உரிமம் தொடர்பாக சிக்கல்கள் எழுந்தன, இரண்டு நாட்டு அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன ஆனால் இரண்டு நாடுகளும் ஒரு முடிவுக்கு வரமுடியமால் போனது. பின்னர் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் பீரங்கித்தளமாக இலங்கை அரசால் கச்சதீவு பயன்படுத்தப்பட்டது. 1949 இல் இந்தத்தீவை கடற்படை பயிற்சி தளமாக பயன்படுத்தப்போவதாக இந்தியா அறிவித்தது. அதற்கு இலங்கை கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது.  


அரசியலில் நிகழும் மாற்றங்கள் அவ்வப்போது நிலங்களையும் அதன் நிர்வாக எல்லைகளையும் மாற்றி அமைக்கும் என்பதற்கு கச்சதீவு சிறந்த உதாரணம். 


இந்திராகாந்தி அம்மையார் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது 1972 ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் யுத்தம் நிகழ்ந்தது. அந்தக்காலப் பகுதியில் இந்தியாவின் அண்டை நாடாக இருந்த இலங்கை பாகிஸ்தானிற்கு நேசக்கரம் நீட்டியது. யுத்தத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளுவதற்கும் இலங்கை அரசு அனுமதித்தது. இந்த நிலையில் ஒருபுறத்தில் இந்தியாவும் மறுபுறத்தில் இலங்கை, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளும் எதிரணியில் நின்றன.  


இலங்கையின் இத்தகைய செயற்பாடு இந்தியாவின் பிராந்திய அரசியலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்கிற அச்சம் இந்தியாவிற்கு எழுந்தது. எனவே தன்னுடைய நிர்வாகத்தின் கீழுள்ள கச்சதீவை இலங்கைக்கு வழங்கி இலங்கையுடனான உறவை பேண விரும்பியது. இதன் பின்னணியில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் 1974 ம் ஆண்டு யூன் மாதம் 06 ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. கச்சதீவு இலங்கையின் வசமாகியது.

  

இருப்பினும் இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்கள் வழமைபோன்று கச்சதீவை அண்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கும் தீவில் தமது வலைகளை உலத்தி இளைப்பாறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட யுத்த நிலமைகள் இந்த நிலையை மாற்றி அமைத்தது.

  

1983 இல் ஜெயவர்தன ஆட்சிக் காலத்தில் கடல்வலய எல்லை பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் காவல்வலய எல்லை பிரகடனம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1985 இலும் 1993 இலும் இலங்கை அரசு கடல் வலய தடைச்சட்டங்களை ஏற்படுத்தியது. இதனால் இரண்டு நாட்டு மீனவர்களும் தொழில் வளத்தில் பாதிப்புக்களை சந்தித்தனர். எல்லை கடந்து பயணித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். மரணங்களும் நிகழ்ந்தன.

  

இவை தமிழகத்தின் சட்ட சபையில் விவாதங்களை தோற்றுவித்தது. மக்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினார்கள். அனால் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைளின் பிரகாரம் கச்சதீவின் உரிமத்தில் எந்த மாற்றங்களையும் நிகழ்த்தவில்லை.

  

இலங்கையின் கைகளில் கச்சதீவு இருந்தாலும் எல்லை தாண்டுகிற இரண்டு நாட்டு மீனவர்களும் சிறைப்படுகிற அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையை பொறுத்தவரை அதன் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பில் இந்தியாவிற்கு இடையில் எல்லைகள் வேறுபட்ட இயல்பை கொண்டு காணப்படுகிறது.

  

ஆரம்பத்தில் ஆட்புல எல்லை 03 மயில்களாகவும் பின்னர் 06 மைல்களாகவும் இருந்தபோது பிரச்சனைகள் எழவில்லை. பின்னர் எல்லைகளை 12 மைல்களாக மாற்றியபோது 24 மைல்களுக்கு குறைவாக இருந்த பாக்கு நீரிணையில் இவ் எல்லைக்கோடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக மேற்படியும் நிலை எழுந்தது. இதனால் அகல நெடுங்கோடுகளின் அடிப்படையில் இலங்கை இந்திய கடலோர எல்லைகள் வகுக்கப்பட்டன.

  

1974 இல் பாக்கு நீரிணை வரையும் 1976 இல் மன்னார் வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் எல்லைகள் வரைவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. 


ஏன் இத்துணை முக்கியத்துவம்? 

***


மனிதர்களின் சுவடுகளே இல்லாத இந்த கச்சதீவு புவியியல் மற்றும் பொருளாதார ரீதியில் முதன்மையானது. கச்சதீவை அண்டிய கடலில் காணப்படுகிற பவளப்பாறைகள் மீன்களின் இனப்பெருக்கத்தை தூண்டுகின்றன. இதனால் மீன்வளம் நிறைந்த பகுதியாக இருக்கிறது இந்தத் தீவு.


தவிர இலங்கை இந்திய மக்களை கலாச்சார ரீதியாக பிணைக்கும் இன்னும் ஒரு விடயமாக இருக்கிறது இங்குள்ள அந்தோனியாரின் ஆலயம். இந்த ஆலயம் 1913 இல் நிறுவப்பட்டது. கச்சதீவின்மீதான ஆதிக்கப் போட்டிகள் நிலவிவருகிற போதும் வருடம் ஒருமுறை நடைபெறுகிற அந்தோனியார் ஆலய பெருவிழாவில் இரண்டு நாட்டு மக்களும் கலந்துகொண்டு வழிபாடுகளை நிகழ்த்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  

2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 ஆந் திகதிகளில் நடைபெற்று வருகிறது. 


யுத்தத்தின் சத்தங்கள் ஓய்ந்த நிலத்தில் பிரார்த்தனைகள் ஓங்கி ஒலிப்பது என்பது இரண்டு நிலத்திற்கும் உவப்பான ஒன்றுதான். 


மேலும் அறிய👇🏽

https://youtu.be/XcoVfXs9mw4


@2023 

சர்மிலா வினோதினி.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.