நாளை யாழ் பல்கலைக்கழத்தில் பாரிய தொழிற் சந்தை!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (03-03-2023) மிக பெரும் தொழிற் சந்தை நடைபெறவுள்ளது. 

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் முதற்தடவையாக ‘தொழிற் சந்தை 2023’ (‘Career Fair 2023’) நாளைய தினம் கலைப்பீடத்தில் நடைபெறவுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியிலான ‘மேன்மைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி ஊடாக உயர்கல்வியைத் துரித வளர்ச்சிக்குட்படுத்துதல்’ திட்டத்தின் உதவியில் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை முழுவதும் 85இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் இத்தொழிற்சந்தையில் அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சபைகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

‘தொழிற் சந்தை 2023’ இன் தொடக்கவிழாவில், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைக்கின்றார். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில், கலைப்பீடத்தில் நான்காம் வருடம் மற்றும் மூன்றாம் வருட சிறப்புக்கலை மற்றும் பொதுக்கலை பயிலும் மாணவர்களும், யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலைப் பட்டங்கள் பெற்று, வேலைவாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளும் நேரடிப் பயனாளிகளாக இணைந்து கொள்ளவிருக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.