உக்கிரமாகும் உக்ரைன்-ரஷ்யா போர்!

 


கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்றுவரும் ரஷ்யா உக்ரைன் போரில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு உதவிவருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டுக்கு 500 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்திருந்தார். அதையடுத்து. சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதினுடன் நெருக்கம் காட்டினார். கடந்த 20-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரை ரஷ்ய நாளேடான பிராவ்தாவில் வெளியானது.


அதில், "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் உட்பட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசச் சட்டம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திர, பிராந்திய ஒருமைப்பாடு திறம்பட நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு நாடும் சர்வதேச ஒழுங்கை மீறக் கூடாது. சீனா-ரஷ்யா கூட்டணி எந்த மூன்றாம் நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் புதின் எழுதிய கட்டுரை சீனாவில் வெளியாகும் பீப்பிள்ஸ் டெய்லியில் வெளியானது. அதில், "ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. தனக்கு அடிபணியாத எந்த நாட்டையும் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்வதால், சர்வதேசப் பாதுகாப்பு, ஒத்துழைப்பின் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது. உக்ரைன் வழியாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஊடுருவுவதன் மூலம் நேட்டோ தனது நடவடிக்கைகளை உலக அளவில் விரிவுபடுத்த முயற்சி செய்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார் புதின்.


இரு தரப்பின் கருத்துகளையடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "உக்ரைனிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுமாறு புதினுக்கு அழுத்தம் கொடுக்க, சீன அதிபர் ஜின்பிங் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீரென உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், "ஜி-7 நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்று அறிவித்தார்.


இதனால் அதிருப்தியடைந்த ரஷ்யா, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்ட தனது ராணுவ விமானங்களை ஜப்பான் கடல்மீது ஏழு மணி நேரத்துக்கும் மேலாக பறக்கச் செய்தது. அது ச


ர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த, ஜப்பான் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தது. அதற்கு ரஷ்ய தரப்பில், “இது சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை" என்று பதிலளிக்கப்பட்டது.


இந்த நிலையில், உக்ரைனின் பாக்முட் நகரத்தைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையையும் ரஷ்யா தீவிரப்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி முதல் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் முன்பக்கத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளை ரஷ்யப் படைகள் தாக்கிவருகின்றன.


இது குறித்து உக்ரேனிய ராணுவம், "லைமானிலிருந்து குபியன்ஸ்க் வரையிலும், அதேபோல் தெற்கில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரின் புறநகரில் இருக்கும் அவ்டிவ்காவிலும் கடுமையான சண்டைகள் நடந்தன" எனத் தெரிவித்தது.


பாக்முட்டின் மேற்கில் இருக்கும் கோ


ஸ்டியன்டினிவ்காவில், ரஷ்ய ஏவுகணை ஒன்று குடியிருப்பின்மீது மோதியதில் குறைந்தது மூன்று பெண்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு சுமி பிராந்தியத்தில், ஒரு நிர்வாக கட்டடம், ஒரு பள்ளிக் கட்டடம், குடியிருப்புக் கட்டடங்கள்மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.


இந்த அறிக்கைகளுக்கு ரஷ்யா தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. தெற்கில் ஒடேசா பகுதியில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த பகுதியை தங்கள் படைகள் அழித்ததாக ரஷ்யா கூறியது. இதேபோல் உக்ரைனில் தொழில்மயமான பகுதியாக டான்பாஸ் இருக்கிறது. இதை முழுமையாகக் கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் குளிர்கால தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான துருப்புகள் இறந்தபோதிலும் இந்தத் தாக்குதல் இதுவரை குறைந்த வெற்றியையே ரஷ்யாவுக்கு கொடுத்திருக்கிறது.


இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், "பாக்முட், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 10,000 உக்ரேனிய குடிமக்கள், பல முதியவர்கள், உடல்நலன் பாதிப்புள்ளவர்கள் மிகவும் மோசமான நிலைமைகளை அனுபவித்துவருகிறார்கள்.


அவர்கள் நிலத்துக்குள் குழி அமைத்து அதில்தான் வாழ்ந்துவருகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர், "உக்ரைனைச் சுற்றி ராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்களை உருவாக்க, ரஷ்யா உக்ரைனுக்குள் ஆழமாகப் போரிடுகிறது" என்றார்.


மேலும் ஐ.நா, போர் உரிமை மீறல்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இறப்புகளை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பெரும்பாலும் உக்ரேனியர்கள் காணாமல்போனதாகவும், சித்ரவதை மற்றும் கற்பழிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், ரஷ்யா இதை மறுக்கிறது.


நன்றி – விகடன்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.