விளித்து நில்...!


ஒப்பாரிகள் ஓயாத

நாட்களாய்
மே திங்கள் சிவந்த
காட்சிகளாய்
எப்போதும் நீங்காத
வலிகளாய்
நாடி நாளங்களை
அழுத்திப் பிடிக்கும்
கழுகள் துரத்திக்
கொத்திய கோரவலி
கொதிக்கும் கானலாய்
மனவறைகளை
எரித்து கிளம்புகிறது!
சப்பாத்துக்கால்களின்
சதிராட்டத்தில்
குருத்துகளும் சருகுகளும்
உதிர்ந்து போன
உதிரம் உறைந்த நினைவுகளை
உப்புத்தின்பவன்
எப்படி மறந்து
போவான்!
கொத்துக் கொத்தாக
கொல்லப்பட்டவர்களும்
வித்துடல்களாய் விதைக்கப்
பட்டவருமாய்
கொழுந்து விட்டெரிந்த
கொடும் நெருப்பிலும்
கொள்கையை
விட்டுக்கொடுக்காத
விடம் தின்றவரின்
திடமான கனவிற்காய்
தமிழின அழிப்பென்ற
ஆயுதத்தை ஏந்திப் போராடு!
இரத்தமும் சதையுமாய்
சிதைந்து சின்னாபின்னமாகிய
இனத்தின் உரிமைக்காய்
இறுதிவரை நின்று
மூச்சுத் துறந்தவரை
இறுதி மூச்சுள்ளவரை
நன்றியோடு தாங்கிப்
போராடு!
குழப்பமும்
நண்டுப்பழக்கமும்
துண்டு துண்டாகும்
குறுநில மன்னர்
வழக்கமும்
சிறு துளிகூட
வீறு கொண்ட
வேங்கைகளின்
தியாகத்தை
மீட்காது!
கொண்டாட்டங்களுக்கும்
சினிமா அரங்கங்களிலும்
முண்டியடிப்பதைபோல்
தாய்மண்ணை மீட்க
அம்மண்ணில்
விடுதலை இராகம் இசைக்க
உப்பிட்டவரை உள்ளளவும் நேசி
தப்பி வந்திட்டோம் என்பதால்
தந்திரமாய் நெளியாது
எம்மினத்தின் கரங்களை பற்றிக்
கொள்!
தமிழர் பலத்தினை தரணிக்கு
விளித்து நில்!
✍️தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.